ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு ஆர்.டி.ஓ.,க்களில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு
சென்னை:ஆர்.டி.ஓ.,க்கள் எனப் படும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு கூடுதலாக 45 நிமிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வாயிலாக ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. உரிய பயிற்சி பெற்ற பின்னும், உரிமம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. மேலும், இடைத்தரகர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த புகார்கள் குறித்து, நம் நாளி தழில் கடந்த மாதம் 17ம் தேதி செய்தி வெளியானது. இ தையடுத்து, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் அதிகரித்து அனு மதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழகம் முழுதும், 4,000க்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்டோர், கார் உள்ளிட்ட கனரக ஓட்டுநர் உரிமம் பெற பயிற்சி பெறுகின்றனர். ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், எங்களுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படாத நிலைமை இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாரத்தில் இரு நாட்களில், இரண்டரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கிய நிலையில், தற்போது கூடுதலாக 45 நிமிடங்கள் ஒதுக்கி உள்ளனர்; இதை, நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க, போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.