உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளாண் டிஜிட்டல் சர்வேயில் மாணவர்கள்! தி.மு.க. அரசை ஒரு பிடிபிடித்த இ.பி.எஸ்.

வேளாண் டிஜிட்டல் சர்வேயில் மாணவர்கள்! தி.மு.க. அரசை ஒரு பிடிபிடித்த இ.பி.எஸ்.

சென்னை; வேளாண் டிஜிட்டல் சர்வே பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு; நாடு முழுவதும் வேளாண் நிலம், பரப்பளவு, அதன் தன்மை, சாகுபடி, போன்ற அனைத்து விபரங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும், நிலங்களின் வகைகளை டிஜிட்டல் சர்வே முறையில் தொகுத்து வழங்க அறிவுறுத்தியுள்ளது.இதனை, வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் சர்வே திட்டத்தை சுமார் ரூ. 2,817 கோடியில் மேற்கொள்ளவும்; மத்திய அரசு நிதியாக சுமார் ரூ. 1,940 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாகவும், இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.மத்திய அரசு, ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு ஏதுவாக அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் நில அளவு, நில வகைப்பாடு, சாகுபடி பரப்பு மற்றும் சாகுபடி பயிர்கள், பாசன வசதிகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை அளிக்குமாறு 2023ம் ஆண்டே பணித்திருந்தது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உட்பட பல மாநிலங்கள் 90 சதவீத பணிகளை முடித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் உள்ள நிலங்களின் அளவு, வகைப்பாடு வகைகள் பற்றிய முழு விவரமும் வருவாய்த் துறையிடம் உள்ளது. எனவே, மாநில அரசு வருவாய்த் துறை டிஜிட்டல் சர்வேக்கு தேவைப்படும் வகையில் புள்ளி விவரங்களைக் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க முடியும். மேலும், வருவாய்த் துறை ஏற்கெனவே தங்களுக்குள்ள பணிச் சுமையுடன் கூடுதலாக இப்பணியை செய்யும்போது, அதற்கென்று ஒரு மதிப்பூதியத்தை வழங்கலாம். இதன்மூலம் 100 சதவீத புள்ளி விவரங்கள் டிஜிட்டல் சர்வேக்கு வழங்க முடியும்.ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, இதுவரை ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்தப் பணியை மேற்கொள்வதற்கு கூடுதல் சிறப்பூதியம் கேட்டு, பணிகளை துவக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதற்குக் காரணம், இந்தத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது என்பதுதான் என்று செய்திகள் வந்துள்ளன.மற்ற மாநிலங்களில் டிஜிட்டல் சர்வே அந்தந்த மாநில வருவாய்த் துறை மற்றும் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் தி.மு.க., அரசு மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தப் பணியை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக செலவிட மனமில்லாத இந்த ஏமாற்று மாடல் அரசு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதில், அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களை டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பில் ஈடுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.வருவாய்த் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியை, வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை செய்ய ஈடுபடுத்தியதால் மாணவர்களின் படிப்பு பாதிப்படைந்து உள்ளது. டிஜிட்டல் சர்வே பணிகளை மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதன் மூலம் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், கழிப்பிட வசதி, முதலுதவி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளதாகவும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.சர்வே பணிக்கு செல்லும் கிராமம், மலைப் பகுதி போன்ற பாதுகாப்பற்ற தொலைதூர பகுதிகளில் சர்வே பணிகளில் ஈடுபடும் மாணவ, மாணவியர்களுக்கு சமூக விரோதிகளாலும், பாம்பு மற்றும் தேள் போன்ற விஷப் பூச்சிகளினாலும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் இது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதன் மூலமாகவும், இப்பணியை தமிழகத்தில் எளிதாக செய்ய முடியும்.இதைவிடுத்து, மாணவர்களைப் பயன்படுத்தி செலவின்றி செய்யத் துடிக்கும் இந்த அரசு, அதற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை என்ன செய்யப் போகிறது. கல்வி பயில வேண்டிய மாணவர்களை இத்தகைய கடினமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மாணவர்களை உடனடியாக இப்பணிகளில் இருந்து விடுவிக்க வலியுறுத்துகிறேன்.மத்திய அரசு, வேளாண் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு நேரங்களில் நேரடியாக நிதி வழங்குவதற்கும், மானியம் வழங்குவதற்கும் இந்த டிஜிட்டல் சர்வேக்களை பயன்படுத்தக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கும் நிலையில், எவ்வித முன்அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100 சதவீதம் சரியாக இருக்குமா? அதில் தவறு ஏதேனும் ஏற்பட்டால் யார் அதற்கு பொறுப்பேற்பார்கள் ? வருவாய்த் துறை அலுவலர்களோ, தனியார் நிறுவனமோ இத்தகைய புள்ளி விவரங்களை வழங்கும்போது அதற்கு அவர்கள் முழு பொறுப்பேற்பார்கள்.எனவே, இந்த சர்வே பணியில் ஈடுபடும் வருவாய்த் துறையினருக்கு மதிப்பூதியம் வழங்கியோ அல்லது தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தோ, குறித்த காலத்திற்குள் டிஜிட்டல் சர்வே பணிகளை முடிக்குமாறும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பல்லவி
நவ 11, 2024 22:03

சுவாதி மர்ம மரணத்திற்கு பதில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொலை கொடநாடு , ஸ்டெர்லைட் ஆலை கொலை இவையெல்லாம் பற்றி ஆளுமைகள் ஏதாவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இதுவரை யாரும் எதுவும் பேசவில்லை பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் mutual exchange of money between political leaders


Anantharaman Srinivasan
நவ 11, 2024 21:12

சரியான கேள்வி.. முன்அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100 சதவீதம் சரியாக இருக்குமா? அதில் தவறு ஏதேனும் ஏற்பட்டால் யார் அதற்கு பொறுப்பேற்பார்கள் ?


sridhar
நவ 11, 2024 21:04

நாசமாபோன ஆட்சி . என்னிக்கி ஒழியுமோ .


புதிய வீடியோ