சென்னை : பா.ஜ.,வில் இருந்து வந்த நடிகை கவுதமி, தடா பெரியசாமி, பாத்திமா அலி ஆகிய மூவருக்கும், அ.தி.மு.க.,வில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த 25 ஆண்டுகளாக, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராக கவுதமி இருந்தார். 2021 சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிட, ராஜபாளையம் தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த கவுதமி, அ.தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது அவரை, கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலராக, பொதுச்செயலர் பழனிசாமி நியமித்துள்ளார்.அதேபோல், சிதம்பரம் லோக்சபா தொகுதி தரப்படவில்லை என்ற கோபத்தில் இருந்த தடா பெரியசாமி, பா.ஜ.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அவருக்கு எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலர் பதவி தரப்பட்டு உள்ளது. பா.ஜ., ஆதரவு அமைப்பில் நிர்வாகியாக இருந்த பாத்திமா அலி, லோக்சபா தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அவருக்கு தற்போது அக்கட்சியில் சிறுபான்மையினர் பிரிவு துணை செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலராக உள்ள சன்னியாசி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அ.தி.மு.க., விவசாய பிரிவு துணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.