போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெறும் தி.மு.க., அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேச்சு
சாத்துார்,:போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெறும் கட்சி தி.மு.க..தான் அ.தி.மு.க., கிடையாது என சாத்துாரில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தின் போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். சாத்துாரில் அவர் பேசியதாவது: அமைச்சர் துரைமுருகன் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருப்பதால் தேர்தல் கமிஷன் போலி வாக்காளர்கள் சேர்த்துள்ளது குறித்து பழனிச்சாமி கருத்து ஏதும் கூற வில்லை என்று கூறியுள்ளார். தற்போது ஆட்சி அதிகாரம் உங்களிடம் உள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். உங்கள் கட்டுப்பாட்டில் தான் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளார்கள், நீங்கள் நினைத்தால் மட்டுமே போலி வாக்காளர்களை சேர்க்க முடியுமே தவிர எங்களால் எப்படி சேர்க்க முடியும். உள்ளாட்சித் தேர்தலின் போது சென்னையில் போலி வாக்காளர் ஒருவரை ஓட்டுச் சாவடியில் வைத்து பிடித்து எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் ஒப்படைத்த போது போலி வாக்காளரை விட்டு விட்டு புகார் செய்த எங்கள் முன்னாள் அமைச்சரை சிறை வைத்தீர்கள் மேலும் பெரம்பலுார், ஆர்.கே.நகர் தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்து நீதிமன்றம் சென்று போலி வாக்காளர்களை நீக்க வைத்தது அ.தி.மு.க.,எங்களை குறை கூற உங்களுக்கு அருகதை இல்லை. தமிழக அரசு தற்போது நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்காமல் எப்படி நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என ஸ்டாலின் கூறுகிறார். இன்னும் உள்ள எட்டு மாதங்களில் மேலும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கினால் தமிழ்நாடு என்ன ஆகும். மக்களை தி.மு.க அடமானம் வைத்து விடும். இப்படி கடன் வாங்கி ஆட்சி நடத்துபவர்களின் ஆட்சி தொடர வேண்டுமா. தற்போது விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக குழுவைத்து கண்காணித்து எந்த பொருளின் விலை உயர்கிறதோ அந்த பொருள் எங்கு குறைவாக கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொண்டு வந்து நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு கிடைக்க செய்து விலைவாசியை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். தற்போது தி.மு.க., அரசு இதுபோன்று குழு அமைக்காமல் எப்படி எல்லாம் கடன் வாங்கலாம் என்று ஆலோசிக்க ஒரு குழு அமைத்திருப்பது போலத் தெரிகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். என்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டாசு தொழில் பிரச்னைக்கு அ.தி.மு.க., தீர்வு ஏற்படுத்தும்
சிவகாசி: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நேற்று சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர் பேசியதாவது: பட்டாசு பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், சிறப்பு வழக்கறிஞரை நியமித்து வாதடியதும் அ.தி.மு.க., அரசு. டில்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசுவை வைத்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். தமிழகத்தை சேர்ந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம். பட்டாசு தொழிலுக்கு பிரச்னை என்றால் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மூலம் ராஜ்யசபாவிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்றார். * சிவகாசி அருகே நாரணாபுரத்தில் பட்டாசு தொழிலார்களிடம் குறைககளை கேட்ட பின் பழனிசாமி கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் வீடில்லாத தொழிலாளர்களுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். பட்டாசு தொழில் பிரச்னை இல்லாமலும், அதே நேரம் பாதுகாப்பாகவும் நடக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், காமராஜ் உடன் இருந்தனர்.