சென்னை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், வரும் 19ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், தனி கட்சி துவங்க அவசியமில்லை,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின், சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருவான்மியூரில் நேற்று நடந்தது.அதில் பங்கேற்று பன்னீர்செல்வம் பேசியதாவது:அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதா தான் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தோம். அதை ரத்து செய்து விட்டு, இன்றைக்கு பொதுச்செயலர் என்ற பட்டத்தை பழனிசாமி சூட்டிக் கொண்டார்.அவராகவே முன்வந்து, பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செயய வேண்டும். அதுவரை, உரிமை மீட்பு குழுவின் போராட்டம் தொடரும். கட்சி வளர்ச்சிக்கு பழனிசாமி எந்த தியாகமும் செய்யவில்லை. ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வர் பதவி பெற்றார். இதை, இந்திய திருநாடு அறியும்.முதல்வர் பதவியை கொடுத்த சசிகலாவை, தரக்குறைவாக விமர்சித்தார்; நம்பிக்கை துரோகம் செய்தார். அவருடைய ஆட்சிக்கு சோதனை வந்தபோது, இந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவு தேவைப்பட்டது.அன்று, நானும் என்னுடன் இருந்தவர்களும் சட்டசபையில் எதிர்த்து ஓட்டு அளித்திருந்தால், அவருக்கு முதல்வர் பதவி இல்லாமல் போயிருக்கும். நன்றி இல்லாதவர் பழனிசாமி.கொங்கு மண்டல அ.தி.மு.க.,வினர் நுாற்றுக்கு நுாறு சதவீதம், நமக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளனர். பொதுச்செயலர் சட்டவிதி தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும் 19ல் வருகிறது. வழக்கு நடப்பதால், அதில் முடிவு தெரிய வேண்டும்; அதுவரை, தனிக்கட்சிக்கு இடமில்லை.நம் தரப்பில் அனைத்து பூத் கமிட்டிகளிலும் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன; மீதமுள்ள 40 சதவீத பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கும் பணியை, 15 நாட்களில் முடிக்கும் மாவட்ட செயலர்களுக்கு, 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசு வழங்கப்படும்.கூட்டணி கட்சிகளுக்கு நம் மீது நம்பிக்கை வரும் வகையில், கட்சி கட்டமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.