திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படாததை கண்டித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை, எட்டு நாட்களாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில், மர்ம நபரை பொது மக்கள் அடையாளம் கண்டு தகவல் அளிக்கும் விதமாக, ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, 'சிசிடிவி கேமரா'வில் பதிவான குற்றவாளியின் படத்தை நேற்று போலீசார் வெளியிட்டனர். அவரை கைது செய்ய, 10 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள 'டவர்'ரில் பதிவான மொபைல் போன் எண்களை பட்டியலிட்டு, மர்ம நபரை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகிக்கும் நபர்களை, ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளி கைது செய்யப்படாததை கண்டித்து, நேற்று ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷமிட்ட பின், ஆரம்பாக்கம் காவல் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க.,வினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள், காவல் நிலையம் எதிரே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.இதனால், தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வினரிடம் மனுவை பெற்ற போலீசார், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.