உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு

அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து, சட்டசபை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுவது குறித்து, கேள்வி எழுப்ப முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து, பா.ம.க., -- ஜி.கே.மணியை பேச அழைத்தார். இதனால், அதிருப்தி அடைந்த பழனிசாமி, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, பழனிசாமி பேச அனுமதிக்கும்படி கோஷம் போட்டனர். அப்போது, அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''எதிர்க்கட்சி தலைவர் பேச முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்போம்,'' என்றார். அதைத்தொடர்ந்து பேசிய பழனிசாமி, ''கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது, நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை,'' என்று குற்றம்சாட்டினார். அதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். அதை ஏற்க மறுத்து பழனிசாமி பேசியது, சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கருப்பு சட்டை அணிந்தது ஏன்?

'டாஸ்மாக்' ஊழல் குறித்து கேள்வி எழுப்பும் வகையில், 'யார் அந்த தியாகி' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட, 'பேட்ஜ்' அணிந்து, நேற்று முன்தினம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கோஷம் எழுப்பினர். அப்போது, கையில் பதாகைகளை, 14 எம்.எல்.ஏ.,க்கள் வைத்திருந்தனர். அந்த, 14 பேரையும் நாள் முழுதும், 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது, 'பார்லிமென்ட் விதிமுறையை பின்பற்றி, இனி சட்டசபைக்கு யாரும், பேட்ஜ் மற்றும் பதாகைகளை எடுத்து வரக்கூடாது. அவ்வாறு எடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, சபாநாயகர் எச்சரித்திருந்தார். அதனால் நேற்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் கருப்பு நிற சேலை அணிந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை