திருவண்ணாமலையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: திருவண்ணாமலையில் அண்ணாதுரை சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, சிலையை திருடிச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதை கண்டித்தும், அண்ணாதுரை சிலையை திருடியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில், வரும் அக்டோபர் 3ம் தேதி, திருவண்ணாமலையில் அகற்றப்பட்ட அண்ணாதுரை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருடு போனதா; அகற்றப்பட்டதா?
திருவண்ணாமலையில், அண்ணாதுரையின் வெண்கல சிலையை, 1969ல் எம்.ஜி.ஆர்., முன்னிலையில், கருணாநிதி திறந்து வைத்தார். கடந்த 25ம் தேதி நள்ளிரவில், இந்த சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து, சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். அ.தி.மு.க., நிர்வாகிகள் புகார் அளித்ததோடு, ஆர்ப்பாட்டமும் அறிவித்துள்ளனர். ஆனால், சிலையின் பீடம் சேதமடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகளுக்காகவே சிலை அகற்றப்பட்டு உள்ளது. மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.