உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பெண் நிர்வாகிக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு

அ.தி.மு.க., பெண் நிர்வாகிக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு

சென்னை:முதல்வரை அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., பெண் நிர்வாகிக்கு முன் ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சேலம், ஆத்துாரில், கடந்த செப்டம்பரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், மாநில மகளிர் அணி துணைச் செயலர் அமுதா பேசினார். முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரையும், அமைச்சர்களையும், அவதுாறாக பேசியதாக, ஆத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் அமுதா மனுத் தாக்கல் செய்தார்.போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், ''முதல்வர், குடும்பத்தினர், அமைச்சர்களுக்கு எதிராக அவதுாறாக, அசிங்கமாக பேசி உள்ளார். நீதிமன்றம் அவருக்கு கருணை காட்டக்கூடாது,'' என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவு:துவக்கத்தில், அவரது கட்சியின் முன்னாள் தலைவர் பற்றி சில வரிகள் பேசி விட்டு, மறைந்த முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், அவரது குடும்பத்தினர், அமைச்சர்களுக்கு எதிராக மோசமாக பேசி உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சு சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், நாகரிகத்தின் எல்லையை தாண்டும் விதமாக, அந்த உரிமையை எடுத்துக் கொள்ள முடியாது.குறிப்பிட்ட சமூக பெண்கள் குறித்து பேசியதற்காக, நடிகை ஒருவரது முன்ஜாமின் மனுவை, இந்த நீதிமன்றம் நிராகரித்தது. மனுதாரரை மன்னிக்கலாம் என்றும், மன்னிப்பு கேட்டு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கும்படியும், அவரது வழக்கறிஞர் கோரியதை தொடர்ந்து, மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பார்க்கும்போது, தனது பேச்சுக்காக அவர் முழு மனதுடன் வருந்தியதாக தெரியவில்லை.மனுவில் கூறியதை பார்க்கும்போது, அவரது பேச்சை நியாயப்படுத்த முயற்சிப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மனு மீது, நீதிமன்றத்துக்கு திருப்தி இல்லை. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி