ஏர் இந்தியா - லுப்தான்சா ஒப்பந்தம் கூடுதல் வழித்தடங்களில் விமானம்
சென்னை:ஏர் இந்தியா மற்றும் லுப்தான்சா விமான நிறுவனங்கள் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக, சர்வதேச நாடுகளுக்கு, கூடுதல் விமான வழித்தடங்கள் கிடைத்துள்ளன.இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:ஏர் இந்தியா மற்றும் லுப்தான்சா இடையிலான, புதிய கோட்ஷேர் ஒப்பந்தம் காரணமாக, இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே, கூடுதலாக, 60 விமான வழித்தடங்கள் கிடைக்கும். இதனால், மற்ற விமான வழித்தடங்களின் எண்ணிக்கையும், 100க்கு மேல் உயர்ந்துள்ளது.ஏர் இந்தியா விமான நிறுவனம், ஐரோப்பாவில் உள்ள, 26 நகரங்கள் மற்றும் அமெரிக்காவின் மூன்று நகரங்களுக்கு இணைப்புகளை வழங்க உள்ளது.லுப்தான்சா குழும விமானத்தில் வரும் பயணியர், இந்தியாவின், 15 முக்கிய நகரங்களுக்கு செல்ல முடியும். இதில், டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அடங்கும்.டில்லி, மும்பை பகுதியில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டு நகருக்கும், அங்கிருந்து மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கும், 'கோட்ஷேர்' முறையில் விமான சேவைகள் கிடைக்கும். இந்த விரிவாக்கம் விதிமுறை ஒப்புதலுக்கு பிறகு அமலாகும். எதிர்காலத்தில் கூடுதல் வழித்தடங்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.