அகில இந்திய கிரிக்கெட் போட்டி: சென்னை ஐகோர்ட் அணி வெற்றி
சென்னை:சென்னையில் நடந்த, வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது.வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி, 1998 முதல் நடந்து வருகிறது. நடப்பாண்டு சென்னையில் 'டி20' கிரிக்கெட் போட்டி நடந்தது. 21 போட்டிகள்
கடந்த 21ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், உஜ்ஜல் புயான், ஆர்.மகாதேவன் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.போட்டியில், அலகாபாத், ஆந்திரா, டில்லி, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, கேரளா, சென்னை, ஒடிசா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த, 248 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, சென்னை வழக்கறிஞர்கள் கிரிக்கெட் சங்கத் தலைவர் எம்.வேல் முருகன், செயலர் ஆர்.முரளி ஆகியோர் செய்திருந்தனர்.சென்னை ஐ.ஐ.டி., ஏ.எம்.ஜெயின் கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், மொத்தம் 21 போட்டிகள் நடந்தன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அணிகள் மோதின. த்ரில் வெற்றி
இதில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற அணிக்கு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், பரிசு மற்றும் சுழற் கோப்பையை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்மை அதிகாரி காசி விஸ்வநாதன், தொழில் அதிபர் ஜெயமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.