உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸ் நீக்கிய கட்சியினரை மீண்டும் நியமித்தார் அன்புமணி!பிளவை நோக்கி செல்கிறது பா.ம.க.,

ராமதாஸ் நீக்கிய கட்சியினரை மீண்டும் நியமித்தார் அன்புமணி!பிளவை நோக்கி செல்கிறது பா.ம.க.,

சென்னை: பா.ம.க.,வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான சண்டையால், அக்கட்சி பிளவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகளை நீக்கி, ராமதாஸ் அதிரடி காட்டிய அதே நேரத்தில், அவர்களை உடனடியாக அப்பொறுப்பில் நியமித்து, அன்புமணி பதிலடி கொடுத்திருக்கிறார். அத்துடன் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் தனக்கே அதிகாரம் இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.தன் செயல்பாடுகளை ராமதாஸ் கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த அன்புமணி முடிவு செய்தார். சென்னை சோழிங்கநல்லுாரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=goepmkcb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலையில், 23 மாவட்ட செயலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 22 பேர் பங்கேற்றனர். ஆனால், இக்கூட்டம் துவங்கிய நேரத்தில், அதில் பங்கேற்ற பொருளாளர் திலகபாமாவை, அப்பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்தார்.

நிராகரிப்பு

அவருக்கு பதிலாக, திருப்பூர் சையத் மன்சூர், பொருளாளராக நியமிக்கப்படுகிறார் என்றும் கூறியிருந்தார். அதை நிராகரித்த அன்புமணி, பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார் என்று அறிவித்தார். அடுத்து, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சிவகுமாரை, மாவட்ட செயலர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அதையும் நிராகரித்த அன்புமணி, அப்பதவியில் அவர் தொடர்வார் என்றார்.இப்படி தந்தையும், மகனும் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படத் துவங்கி விட்டதால், கட்சி விரைவில் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பா.ம.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. இச்சூழலில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது:புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பித்தல் சம்பந்தமாகவே, மாவட்ட தலைவர்கள், செயலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர் சேர்க்கை நடக்கும். அதன்படி, இளைஞர்களை அதிகளவில் புதிய உறுப்பினர்களாக சேருங்கள். பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இவற்றை மூன்று வாரங்களுக்குள் வேகமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும்.கட்சி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தலைவராக பொறுப்பேற்று உள்ளேன். நானோ, ராமதாசோ, பா.ம.க., இல்லை. நீங்கள்தான் பா.ம.க., இந்த கட்சி யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை. பொதுக்குழுவில் நீங்கள் தான் என்னை தேர்வு செய்தீர்கள். என் கடமைப்படி, உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாகவே செயல்படுவேன். பொறுப்புகள் வரும்; போகும். உங்களது அன்பு, பாசம் எப்போதும் நீடித்து இருக்கும். அந்த வகையில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

நிதி தரலாம்

கட்சியை ராமதாஸ் துவக்கியபோது இருந்த அவரது கொள்கை, சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், அதை மனதில் நிறுத்தி, அந்த கொள்கையை நடைமுறைப்படுத்த, களத்தில் நாம் வேகமாக செயல்பட வேண்டும். இந்த கொள்கையை செயல்படுத்த, உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக நான் பணியாற்றுவேன்.கட்சி உறுப்பினர் அட்டையில், 'க்யூ.ஆர்., கோடு' உள்ளது. 'ஸ்கேன்' செய்து, 5 ரூபாய்க்கு மேல் உங்கள் விருப்பம் போல கட்சிக்கு நிதி அளிக்கலாம். உண்மையான உறுப்பினர்களை மட்டுமே சேருங்கள். எண்ணிக்கையை அதிகரிக்க, மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். இப்பணியை அர்ப்பணிப்புடன் ய்யுங்கள்.முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அனைத்தும் சரியாகும்; சரிபடுத்தி விடுவேன். நம் பொருளாளரை மாற்றுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அடுத்த 10 நிமிடங்களில், திலகபாமா பொருளாளராக தொடர்வார் என கடிதம் கொடுத்து விட்டேன். அவரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. நானோ, மற்றவர்களோ நினைத்தாலும் முடியாது.பல பதவிகள், பொறுப்புகளை பார்த்து விட்டேன். தலைமை தொண்டனாக இருக்கிறேன். என்னை தலைவராக தேர்ந்தெடுத்தது முதல், எனக்கு மன உளைச்சல் தான். நேற்றுதான் விடுதலை கிடைத்தது. இன்று நாம் வேகமாக போகலாம். எந்த தடை வந்தாலும் உடைத்தெறிந்து, நாம் முன்னேறுவோம். வரும் தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெறும். அடுத்து நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில், 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற பிரசாரம் வெற்றி பெற்றது; நாம் வெற்றி பெற முடியவில்லை.

கவலை வேண்டாம்

அன்று கருணாநிதி ஒரு பக்கம், ஜெயலலிதா ஒரு பக்கம் இருந்தனர். அதே பிரசாரத்தை 2019ல் செய்திருந்தால், இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். அதை பண்ண முடியாத சூழ்நிலை. அது என்னவென்று உங்களுக்கு தெரியும். மாவட்ட நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். யாரை நீக்கினாலும், அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் தொடர்வதாக கடிதம் வரும். எதுவுமே ஆகப்போவது இல்லை. இந்த நிர்வாகிகள் குழுவை உருவாக்க மூன்று ஆண்டுகளானது. இந்த குழுவால் தான் மாநாடு வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்கப் போகிறோம்.இவற்றை கெடுக்க சூழ்ச்சி நடக்கிறது; ஒன்றும் ஆகாது. எவ்வளவு குழப்பங்களை பார்த்து விட்டோம்; பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் உறுதியேற்று களத்தில் இறங்குங்கள். யாருடனும் சண்டை போட வேண்டாம். நம் அடுத்த பணியை செய்வோம்; முன்னேறுவோம். என் மனதில் பல திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்துவதற்கான சுதந்திரமும் கிடைத்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

'தலைவருக்கு மட்டுமே அதிகாரம்'

செய்தியாளர்கள் வெளியேறிய பின், நிர்வாகிகளிடம் அன்புமணி பேசியுள்ளதாவது:நாம் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துள்ளோம்; இதையும் கடந்து செல்வோம். பா.ம.க.,வில் சில குழப்பங்கள் நிலவுகின்றன; அவை விரைவில் சரியாகும். களத்தில் இறங்குங்கள்; நடப்பதை பார்த்துக் கொள்வோம். உலகளவில் கவனம் பெற வைத்த மாநாட்டிற்கு நிதியை நீங்கள்தான் கொடுத்தீர்கள். வரும் தேர்தலில், நம் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி அமைக்க, நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.கட்சி சட்ட விதிகளின்படி, பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சி தலைவருக்கு மட்டுமே அதிகாரம்; மற்ற யாருக்கும் நீக்கும் அதிகாரம் இல்லை. ஏற்கனவே இருப்பவர்கள் மாவட்ட செயலராக தொடர்வர்; யாரையும் மாற்ற முடியாது. கட்சி தலைவருக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன்; நான் இருக்கிறேன். இதுபோன்ற இடைஞ்சல்கள் வரும்; போகும். மனதில் உள்ளதை சொல்வதற்கான காலம் வரும். களம் நம்முடையது. எந்த சோதனை வந்தாலும், சாதனையாக மாற்றுவோம். இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர், என் அம்மா தான். என் அம்மா மீது சிறு துரும்புகூட பட, நான் விட மாட்டேன்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

வெளியேறுங்கள்

இங்கு, பா.ம.க., செயல்திட்டங்களை தான் பேசப் போகிறோம். ஊடகங்கள் தங்களது ஆதரவை, நாங்கள் செய்யும் போராட்டத்திற்கு கொடுங்கள். தமிழக பிரச்னைகளுக்கு கொடுங்கள். எதை எதையோ எதிர்பார்த்து வராதீர்கள்; ஏமாந்து போவீர்கள். தனியாக கேளுங்கள். எந்த கேள்விக்கும் பயப்பட மாட்டேன். பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பு விரைவில் நடத்தப்படும். தற்போது, கட்சி விவகாரம் பற்றி பேசப்போகிறோம். செய்தியாளர்கள் வெளியேறுங்கள்.- அன்புமணி

நெருக்கடியான நிலையில் கட்சி

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., கவுரவ தலைவர் மணி, எம்.எல்.ஏ., அருள் ஆகியோர் நேற்று கட்சியின் நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர். அதன்பின் அவர்கள் அளித்த பேட்டி: ஜி.கே.மணி: பா.ம.க., பலமான, வலிமையான கட்சி. தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. இது, மனதுக்கு வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. இந்த பிரச்னை விரைவில் சீராக வேண்டும் என்பதற்காக, கட்சி நிறுவனரை சந்தித்தேன். எம்.எல்.ஏ., அருள்: பா.ம.க.,வில் அனைவரும், உச்சகட்ட மன உளைச்சலில் உள்ளனர். எனக்கு அரசியலே வேண்டாம் என்ற மன உளைச்சலில் உள்ளேன். வெளியில் சொல்ல முடியவில்லை. பா.ம.க., தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி. தைலாபுரம் தோட்டம் தான், பா.ம.க.,வினரின் கோவில். கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு, கட்சி நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும், உச்சகட்ட அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bahurudeen Ali Ahamed
மே 31, 2025 14:40

இந்த பிளவிற்கு காரணம் வழக்கம்போல தேசிய கட்சியா? அறிந்தவர்கள் விளக்கம் தரலாம்


பிரேம்ஜி
மே 31, 2025 10:33

நல்ல விஷயம்! இந்த கட்சி ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது! இருவரும் தொடர்ந்து மோதிக்கொள்ளும் நிலமை தொடர் இறைவனை வேண்டுகிறேன்!


Oviya Vijay
மே 31, 2025 09:35

மிக சமீபத்தில் மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி முடித்து விட்டு அதன் பலனை முழுமையாக அறுவடை செய்யும் முன்னரே நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து பேசவேண்டிய உட்கட்சி விஷயங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தி கட்சியே அல்லோலப்பட்டுக் கொண்டுள்ளது... யாவும் பதவி மோகம் படுத்தும் பாடு... தற்காலத்தில் பதவி என்பதே ஒரு போதை தான்... ஒருமுறை அந்த சுகத்தை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள்வது கடினம்... 85 வயதைக் கடக்கப்போகும் ஒருவர்... இதுநாள் வரையில் எம்எல்ஏவாகவோ எம்பியாகவோ இருந்திராத ஒருவர்... நெடுங்காலம் தான் கட்டிக்காத்த ஒரு கட்சியின் தலைவர் பதவியாவது தன்னிடம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்... தன் கட்சியிலுள்ளோர் தன்னை கிள்ளுக் கீரையாக நடத்துவதையும் தன் சொற்படி கேளாமல் நடப்பதையும் பார்த்துப் பார்த்து வந்த ஆற்றாமையின் வெளிப்பாடே ராமதாஸின் இந்த குமுறல்... முக்கியமாக இனி வரப்போகும் தேர்தலுக்கான கூட்டணி விஷயத்தில் தந்தை மகனுக்கிடையில் சுமூகமான தீர்வு எட்டப்படும் என்பது கேள்விக்குறியே...


Santhakumar Srinivasalu
மே 31, 2025 14:27

ஆரம்ப காலத்தில் சாலை ஓரம் இருந்த பசுமை மரங்களை போராட்டம் காரணமாக வெட்டி அழித்த மகான் இவர்.


Kasimani Baskaran
மே 31, 2025 07:06

மாம்பழங்கள் மாங்காய்கள் போல நடந்து கொள்வது துரதிஷ்டவசமானது.


Samy Chinnathambi
மே 31, 2025 06:36

இது பேரனுக்கும் மாமாவுக்கும் நடக்கும் அரசியல். ஏற்க்கனவே ஒரு பொண்ணை கொடுத்தாரு மாமா இன்னொரு பொண்ணையும் கொடுத்தா கட்சியும் பொண்ணும் பேரனுக்கே சொந்தமாகிடும்.. மொத்தத்துல அந்த கட்சி பி.ஜே.பிக்கு சொந்தமாகிடும்..


நிவேதா
மே 31, 2025 06:35

நிறுவனர் என்பவர் கட்சியை ஆரம்பித்தவர் என்ற பொருள் மட்டுமே. Bye Laws படி தலைவர் அல்லது பொது செயலாளருக்கு மட்டுமே அகிகாரிகளையோ உறுப்பினர்களையோ குழுவையோ நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் உள்ளது


Palanisamy Sekar
மே 31, 2025 02:24

குடும்ப உறுப்பினர்களால் பொறுப்பில் உள்ள கட்சிகளின் நிலைமை எப்போதுமே இப்படித்தான் இருக்கும். கருணாநிதி கட்டுப்பாட்டில் திமுக குடும்ப கட்சியாக மாறியதும் பின்னர் அவரது பெரிய குடும்பத்தின் மகன்கள் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார்கள் . அவரே கூட தனது தள்ளாத வயதில் பொதுவெளியில் புலம்பினார். தனது மகன் தன்னை மார்பில் உதைத்தார் என்றும், அடித்தார் என்றும் கூட கண்ணீர் மல்க கூறியதை படித்துள்ளோம். இது குடும்பங்களில் நடக்கின்ற கூத்துக்கள். ஆனாலும் கருணாநிதி ராமதாஸை போல அல்லாமல் கட்சிக்குள் அந்த நேரத்திலும் அந்நியர்கள் எவருமே பொறுப்புக்கு வராமல் கவனமாக சிந்தாமல் சிதறாமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ராமதாஸின் இந்த வயதில் கோபமானது எல்லையில்லாதது. தவறானதும் கூட. பொறுப்பில்லாமல் பேசுவதும் கட்சியை சிதைக்க முற்ப்படுவதும் சரியல்ல. தள்ளாத வயதில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தவிர்த்திருக்க வேண்டும். அன்புமணி ராமதாஸை பற்றி அவர் தாயை தாக்கினார் என்பதுபோன்ற பொய் புகார்களை சொன்னால் தொண்டர்கள் கொந்தளிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அன்புமணியின் குணாதிசயம் அவரது பண்பான பேச்சும் பொறுப்பான செயல்களும் அனைவரும் அறிந்ததே. கட்சியினரையும் தாண்டி பொதுவெளியில் அன்புமணி அவர்கள் சிறப்பானவர்தான் அதில் சந்தேகமே இல்லை. அதனால் ராமதாஸின் பொய் புகார்களை நம்பும் அளவுக்கு தொண்டர்கள் யாருமில்லை. பிற கட்சியினரும் அவரை முழுமையாக நம்புகின்றார்கள். ராமதாஸ் இந்த தள்ளாத வயதில் ஒதுங்கி நின்று மகனின் திறமையை போற்றவேண்டும் ரசிக்கவேண்டுமே தவிர கொடூரமாக வாய்ஜால வார்த்தைகளால் புண்படுத்த கூடாது என்பதுதான் இன்றைய அரசியலில் பாமகவுக்கு மிக நல்லது. அன்புமணி அவர்கள் நிச்சயம் இந்த இக்கட்டான நிலையில் கட்சியை மீண்டும் காப்பாற்றி தமிழக அரசியலில் தனது பங்கினை பொறுப்போடு செயலாற்றுவார் என்றே நிச்சயம் எதிர்பார்க்கலாம். நல்ல மனிதர் அன்புமணி. நிச்சயம் மனம் புண்பட்டு வருத்தப்பட்டிருப்பார். தொண்டர்கள்தான் அவருக்கு பக்கபலமாக இருந்து தங்களது முழுமையான ஆதரவினை நல்கவேண்டும். பிளவை எதிர்பார்க்கும் பிற சாதிக்கட்சியின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப்போட்டு அவர்களின் நப்பாசையை துவம்சம் செய்திட ஒன்றுபட்ட தொண்டர்கள் அன்புமணிக்கே தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் இதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.


மூர்க்கன்
மே 31, 2025 12:21

இதென்ன நியாயம் ராமதாஸ் சொன்னது பொய்யாம் ஆனால் பொது வெளியில் ஒருபோதும் தானைத்தலைவர் சொல்லாதது இவருக்கு உண்மையாம்.


சமீபத்திய செய்தி