சென்னை: ஒரு மாதம் கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், தமிழகம் முழுதும் நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாநில தலைவர் ரத்தினமாலா தலைமை வகித்தார். போராட்டம் குறித்து, சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தற்போது, அங்கன்வாடி மையங்களில், 7,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட, 27,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒவ்வொரு ஆசிரியரும், ஊழியரும் கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், குழந்தைகளுக்கான கல்வி பாதிக்கிறது. மேலும், பல மையங்களில் சமையலரே, குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் உள்ளனர். இதுகுறித்து, அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை பலமுறை நேரில் சந்தித்து பேசியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. அங்கன்வாடி மையங்களில், பயனாளிகள் சத்துமாவு பெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு, 'போஷன் டிராக்கர்' என்ற செயலியை, கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மையங்கள், கிராமப்புறங்களில் உள்ளன. அங்கு இணைய வசதி இல்லாததால், இந்த செயலியை பயன்படுத்துவது சவாலாக உள்ளது. இதனால், தினசரி மூன்று பயனாளிகளுக்கு கூட, எங்களால் சத்துமாவு வழங்க முடிவதில்லை. எனவே, அரசு இம்முறையை உடனடியாக கைவிட வேண்டும். அதேபோல, கோடை வெயில் காலத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
'போராட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'
'குழந்தைகள் நலனுக்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி மைய ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், முன்னறிவிப்பு இன்றி நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் துவங்கியுள்ளது. இதனால், குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மூடப்பட்ட மையங்கள் மற்றும் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன; அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோடை வெயில் காரணமாக, அங்கன்வாடி மையங்களுக்கு, வரும், 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை, 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை வழங்கிய பின்னரும், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்ட விரோத செயல்.உணவு பாதுகாப்பு சட்டப்படி, அங்கன்வாடி மையங்கள், 300 நாட்கள் செயல்பட வேண்டும். அதன் வாயிலாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் முன்பருவக்கல்வி வழங்கப்படுகிறது. இருப்பினும், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும், விடுமுறை நாட்களின் போது, குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிச் செய்யும் வகையில், மே மாத துவக்கத்திலேயே சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, குழந்தைகள் நலனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும், அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.