உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவி விவகாரம் யாராக இருந்தாலும் விடக்கூடாது: திருமா

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் யாராக இருந்தாலும் விடக்கூடாது: திருமா

சென்னை:''தமிழக அரசும் குறிப்பாக காவல் துறையும் நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசுக்கு சுட்டிக்காட்டி வருகிறோம். அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தாலும், அந்த குற்றச்செயல் அதிர்ச்சியையும் வேதனையும் உருவாக்கியுள்ளது.எனவே, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியருக்கு, தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.எனவே, தமிழக அரசும் குறிப்பாக காவல் துறையும் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும். தற்போது கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக ஜாமின் வழங்கக்கூடாது; அவரை சிறையில் வைத்தபடியே புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை பெற்று தர வேண்டும். 'யார் அந்த சார்?' என்ற சந்தேகம் இருப்பதால் தான், நேர்மையான புலன் விசாரணை தேவை என்கிறோம்.அரசு தரப்பில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். எதிர்க்கட்சிகள் போராடுவதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே, எங்களின் வேண்டுகோள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ