சென்னை: அண்ணா பல்கலை, மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., தலைவர் அன்புமணி மனைவி சவுமியா உட்பட பா.ம.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4w55dhjl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (ஜன.,02) பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க., அறிவித்தது. அதன்படி, காலை 10 மணிக்கு, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற, சவுமியா உள்ளிட்ட பா.ம.க.வினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கைது செய்தனர். அவர்களை வாகனங்களில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.அன்புமணி கண்டனம்
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வழங்க வேண்டும். அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண்களை பாதுகாக்க முடியாத தி.மு.க., அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.தமிழிசை கண்டனம்
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது. இன்று தனது கண்டனத்தை தெரிவிக்க வந்த பா.ம.க.,வைச் சேர்ந்த, போராட்டக் குரல் எழுப்புவதற்கு முன்பே கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.தொடர் கைதுகள் உண்மையை மூடி மறைத்து விட முடியாது. போராட்டங்களை அடக்கு முறையால் முடிவுக்கும் கொண்டு வர முடியாது. தி.மு.க., வின் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு முடிவுக்கு வரும், முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.