உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடாவடித்தனம் தி.மு.க.,வுக்கு வாடிக்கை அண்ணாமலை குற்றச்சாட்டு

அடாவடித்தனம் தி.மு.க.,வுக்கு வாடிக்கை அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:'ஏழை மக்களை மிரட்டி, வாகனங்களை வாங்குவது என, அடாவடித்தனம் செய்வதையே, தி.மு.க., வாடிக்கையாக வைத்திருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:வரும், 19ல் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் கல்லுாரி மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் பஸ்களை, முதல்வர் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என், கலெக்டர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.தி.மு.க., அரசு நடத்தும் நிகழ்ச்சிகள் என்றாலே, மக்கள், வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. கூட்டத்தை காட்டுவதற்கு, நுாறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தர மாட்டோம் எனக்கூறி, ஏழை மக்களை மிரட்டுவது, வாகனங்களை வாங்குவது என, அடாவடித்தனம் செய்வதையே தி.மு.க., வாடிக்கையாக வைத்திருக்கிறது. தென்காசியில் அரசு டாக்டர்களிடமே கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இப்படி, மக்களுக்கு தொடர்ந்து இன்னல்களை கொடுக்கும், தி.மு.க.,வின் அராஜக போக்கு கண்டிக்கத்தக்கது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், புதுக்கோட்டையில் ஒரு மதுக் கடையில் சட்ட விரோதமாக மது வகைகள் விற்கப்பட்டன. இது, தமிழகத்தில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய், 'டாஸ்மாக்' ஊழலின் அம்சத்தை விளக்குகிறது. சட்ட விரோத மற்றும் மதுக் கடைகள் மூடிய பிறகு நடக்கும் மது விற்பனை என, அனைத்தும் கணக்கில் காட்டப்படாதவை. அவை, நேரடியாக தி.மு.க., அமைச்சரின் பாக்கெட்டில் சேருகின்றன. தி.மு.க.,வின் பேராசைக்கு எந்த இடையூறும் இல்லை. பட்டப் பகலில் நடக்கும் கொள்ளைகள் அனைத்தும், மிக விரைவில் முடிவுக்கு வரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி