உழவர் அலுவலர் தொடர்பு திட்ட அரசாணைகளை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: 'விவசாயிகள் நலன், அலுவலர்களின் குடும்ப நலன் கருதி, உழவர் அலுவலர் தொடர்பு திட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., அரசு வெளியிட்டுள்ள, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' தொடர்பான அரசாணை, 'கள அலுவலர் ஒருங்கிணைப்பு' என்ற பெயரில், தோட்டக்கலை துறையின் செயல்திறனை குலைக்கும் வகையில் உள்ளதை எதிர்த்து, தோட்டக்கலை துறை அலுவலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்டக்கலை சாகுபடி பரப்பு 13.50 சதவீதம் மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.50 சதவீதம் மற்றும் தமிழக வேளாண் ஏற்றுமதியில், 58 - 60 சதவீத பங்கு வகிக்கிறது. இத்தகைய உயர் மதிப்பு துறைக்கு தனி நிர்வாகமும், துறைசார் நிபுணத்துவமும் அவசியம். ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வேளாண்மை, வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறை திட்டங்களை ஒப்படைப்பது, நிர்வாக குழப்பத்தையும் செயல்திறன் குறைவையும் உருவாக்கும்.தற்போது, தமிழக தோட்டக்கலை துறையில், தொழில்நுட்ப அலுவலர்கள் பலருக்கு முன் அறிவிப்பு இன்றி, தொலைதுார மாவட்டங்களுக்கு அவசர பணியிட மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.அதனால், அவர்கள் கடுமையான பொருளாதார சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள தோடு, அவர்களது குழந்தை களின் கல்வி தொடர்ச்சி யும், எதிர்காலமும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும், 1,000 தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்த துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் முதலீடு ஆகியவை, நீண்ட காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும்.எனவே, விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கருதி, அரசாணைகளை உடனே முழுதுமாக ரத்து செய்ய வேண்டும். தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் நிறுத்தப்பட வேண்டும். தனி துறையாக தோட்டக்கலை தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுத்ததோடு போராட்டம் நிறைவு
வேளாண் துறை வாயிலாக, 'உழவர் நல தொடர்பு அலுவலர் திட்டம் 2.0' துவங்க திட்டமிடப் பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தோட்டக்கலை துறையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு அலுவலகம் முன் அனுமதியின்றி கோஷங்கள் எழுப்பினால், சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கப்பட்டது. வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உத்தரவுப்படி, மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்கு நர்கள் வாயிலாக அலுவலர்களுக்கு நெருக்கடி தரப்பட்டது. இதையடுத்து, தோட்டக்கலை துறை அலுவலகம் முன் திரண்ட நுாற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள், கோஷங்கள் எதுவும் எழுப்பவில்லை. பெருந்திரள் முறையீடு என போராட்டத்தின் பெயரை மாற்றி, தோட்டக்கலை துறை இயக்குநர் குமாரவேல் பாண்டி யனை சந்தித்து மனு அளித்தனர். பின், அங்கிருந்து சென்றனர்.