செல்வநிலை சான்றுக்கு பதிலாக 3 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு
சென்னை: 'அரசு துறைகளில் டெண்டர் எடுப்பதற்கான விண்ணப்பத்தில், செல்வநிலை சான்றுக்கு பதிலாக, மூன்று மாற்று ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்' என, பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களின் திட்டங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ள, 'டெண்டர்' கோரப்படும். இதில் பங்கேற்க விண்ணப்பிக்கும் நபர்கள், தங்கள் தகுதியை உறுதி செய்ய, வருவாய் துறையிடம் இருந்து பெறப்படும், 'சால்வன்சி சான்று' எனப்படும், செல்வநிலை சான்றிதழ் பெற வேண்டும். உத்தரவு வருவாய் துறையிடம், இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து, செல்வ நிலை சான்று வழங்குவது நிறுத்தப்பட்டது. இதற்கான மாற்று ஆவணம் அறிவிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவுக்கு, செல்வநிலை சான்றுக்கு, மாற்று ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பிறப்பித்து உள்ள உத்தரவு: ஒப்பந்ததாரர்கள் பதிவுக்கு, செல்வநிலை சான்றுக்கு பதிலாக, தாக்கல் செய்ய வேண்டிய, மூன்று மாற்று ஆவணங்கள் முடிவு செய்யப்பட்டு உள்ளன. மத்திய பொதுப்பணி துறையில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டியலிடப்பட்ட வங்கியில், சம்பந்தப்பட்ட நபரின் பணப்பரிமாற்றங்கள் அடிப்படையிலான வங்கி சான்றிதழை தாக்கல் செய்யலாம். மாதிரி படிவம் சம்பந்தப்பட்ட நபரின், மூன்று ஆண்டுகளுக்கான பணப்பரிவர்த்தனை குறித்து, பட்டய கணக்காயர் அளிக்கும் சான்றிதழ்; அந்த நபரின் ஆண்டு மொத்த வர்த்தகம் தொடர்பாக பட்டய கணக்காயர் அளிக்கும் சான்றிதழ் போன்றவற்றில், ஏதேனும் ஒன்றை தாக்கல் செய்யலாம். இந்த மூன்று வகை சான்றிதழுக்கான மாதிரி படிவங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே, ஒப்பந்ததாரர்கள் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.