நிதி நிறுவன இயக்குநருக்கு ஐகோர்ட்டில் முன்ஜாமின் மறுப்பு
சென்னை:பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில், முன்ஜாமின் கோரி, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குநர் மோகன்பாபு விஜயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடியில், 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. ஐ.எப்.எஸ்., என அழைக்கப்படும் இந்நிறுவனம், பொது மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாத வட்டி தருவதாகக்கூறி, 6,000 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. உறுதி அளித்தப்படி வட்டி தொகையை வழங்காததால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், 200 பேர் போலீசில் புகார் அளித்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய ஐ.எப்.எஸ்., உட்பட ஆறு நிறுவனங்கள், இயக்குநர்கள், ஊழியர்கள் 13 பேருக்கு எதிராக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை, 'டான்பிட்' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மோசடி புகாரில் நிறுவன இயக்குநர் மோகன்பாபு விஜயன் என்பவர், முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், 'மனுதாரருக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர், பிரிட்டனில் தலைமறைவாக உள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது. வாரன்ட் பிறப்பித்துள்ளது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.