சென்னை : ''மூன்றாம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் விழாவுக்கு, சென்னை ஐ.ஐ.டி., தயாராகி வருகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில், பிப்., 15 முதல், 24ம் தேதி வரை, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து, இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முழக்கத்தை வலியுறுத்தவும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின், 'காசி தமிழ் சங்கமம்' மூன்றாம் ஆண்டு நிகழ்வை நடத்த தயாராகி வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்க, http://kashitamil.iitm.ac.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஐந்து பிரிவுகளில் விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த நிகழ்வுக்கு, பனாரஸ் ஹிந்து பல்கலை, வரவேற்பு கல்வி நிறுவனமாக செயல்படும்.தமிழகத்தில் இருந்து ஐந்து குழுக்களாக, 1,000 பேர் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுனர்கள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து மத்திய பல்கலைகளில் இருந்து, 200 தமிழ் மாணவ - மாணவியர் அடங்கிய குழுவினரும், இதில் பங்கேற்பர்.இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, மகா கும்பமேளாவுடன் இணைந்து இந்நிகழ்வு நடக்க உள்ளது. காசி தமிழ் சங்கமத்தின் பிரதிநிதிகள், மகாகும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடலுடன், அயோத்தி ராமர் கோவிலை தரிசிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.