உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காங்கிரசில் சட்டசபை அமைப்பாளர்கள் நியமனம்

தமிழக காங்கிரசில் சட்டசபை அமைப்பாளர்கள் நியமனம்

சென்னை: அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம் / நகரம் / மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தோடு இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது. தற்போது எம்.பி., தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வகையில் அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் சட்டசபை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பெருங்கோட்ட அமைப்பாளர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், எம்.பி., தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கும் பணிகளில் சிறப்புடன் செயல்பட வேண்டும்.நமது எதிர்கால லட்சியம், காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே கொண்டு வருவது என்பது தான். அதனை அடைவதற்கு, நமது இயக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவது இன்றைய தேவையாகும். அதன்மூலம் அதிக உறுப்பினர்களை கிராம அளவில் இணைப்பது தற்போதைய தேவையும், அவசியமும் ஆகும். கிராம அளவில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும், மக்களின் நீண்டகால பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கு நிரந்தர தீர்வு காண்பது போன்ற இன்றியமையாத சமுதாயப் பணிகளில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது இயக்கத்தை மக்கள் இயக்கமாக உருமாற்றுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதை உணர்ந்து அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 16, 2025 22:28

காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே கொண்டு வருவது என்பது தான். அடிமைகளுக்கு உரிமை கிடையாது. ஆசையும் தேவையற்றது


sankaranarayanan
ஜன 16, 2025 21:29

நமது எதிர்கால லட்சியம், காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே கொண்டு வருவது என்பது தான். அதனை அடைவதற்கு, நமது இயக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவது இன்றைய தேவையாகும் என்று கூறிய தமிழக காங்கிரசு தலைவர், சொல்லுகின்ற வார்த்தைகளிலேயே இAருக்கின்றது அவைகளின் பொருள். பச்சை தமிழர் காமராசரை எதிர்த்து ஒரு மாணவனை நிற்க வைத்து தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றிய அரசு இந்த திராவிட மாடல் அரசு அதை சற்றே நினைத்து பார்த்தாரா இவர். வெட்கமாகஇல்லை,இப்போது அவர்களுடன் கூட்டு சேருவது காமராசர் ஆட்சி வரும் என்பது எல்லாம் மக்களை ஏமாற்றுவதே இவர்களின் போலித்தனம்...


சமீபத்திய செய்தி