உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அகழாய்வில் அரசியலும், தரவுகளை தருவதில் கவுரவமும் கூடாது தொல்லியல் அறிஞர்கள் கருத்து

அகழாய்வில் அரசியலும், தரவுகளை தருவதில் கவுரவமும் கூடாது தொல்லியல் அறிஞர்கள் கருத்து

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட முதற் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை, மத்திய தொல்லியல் துறை மறுத்துள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், 2014 முதல், 2016 வரை, இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டார். அதில், சங்க காலத்தை சேர்ந்த நகர நாகரிகம் இருந்ததற்கான கட்டடச்சுவர், நெசவுத் தொழிலுக்கான தடயங்கள் கிடைத்தன. அடுத்தகட்டமாக அகழாய்வு செய்த ஸ்ரீராமன், குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை என, அகழாய்வை கைவிட்டார்.இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை அகழாய்வுகளை செய்து வருகிறது. அதில், ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை, கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அகழாய்வு பகுதிகளை அப்படியே பாதுகாத்து, திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.தமிழக தொல்லியல் துறை செய்த அகழாய்வு அறிக்கையில், கீழடி நாகரிகம், 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கான கார்பன் பகுப்பாய்வு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள ஆண்டு, பொ.ஆ.மு., 580 என்று கூறப்பட்டுள்ளது.

எம்.பி.,க்கள் கேள்வி

இந்நிலையில், 2014 - 2016ம் ஆண்டுகளில் அகழாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை எழுதாத வகையில், பல்வேறு இடங்களுக்கு அவரை, மத்திய தொல்லியல் துறை இடமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின், தமிழகத்தில் பணியமர்த்தப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், 2023 ஏப்., 30ம் தேதி, மத்திய தொல்லியல் துறை இயக்குநர் வித்யாவதியிடம், 982 பக்க ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அது வெளியிடப்படாமல் இருந்ததால், பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், 'அமர்நாத் சமர்ப்பித்த அறிக்கையில், பொ.ஆ.மு., 8ம் நுாற்றாண்டு குடியேற்றம் பற்றி விளக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை. 'அவற்றை இணைத்தாலோ அல்லது மாற்றினாலோ தான் ஆய்வறிக்கையை வெளியிட முடியும்' என, கடந்த வாரம் மத்திய தொல்லியல் துறை விளக்கம் அளித்தது. இது, தமிழக வரலாற்றை மறைக்கும் முயற்சி என, தமிழகத்தில் இருந்து கண்டனம் எழுந்தது.தொல்லியல் வல்லுநர் மு.சேரன் கூறியதாவது:கீழடியில் மூன்று காலகட்டங்களில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அதாவது, முதல் கால கட்டம், பொ.ஆ.மு., 8 முதல் 5ம் நுாற்றாண்டு வரையும், அடுத்ததாக, பொ.ஆ.மு., 5 முதல் முதல் நுாற்றாண்டு வரையிலும், கடைசியாக, பொ.ஆ.மு., முதல் நுாற்றாண்டில் இருந்து, 3ம் நுாற்றாண்டுக்கு மேலும் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பித்துஉள்ளார்.இதுவரை, அகழாய்வு அறிக்கையை மாற்றும்படி யாரையும் வற்புறுத்தாத நிலையில், அமர்நாத் அறிக்கையை மாற்றும்படி கூறுவது, தனிமனித தாக்குதலாகவும், அறிக்கையை வெளியிட தாமதப்படுத்துவதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மத்திய தொல்லியல் துறையின் இணை இயக்குநர் நந்தினி பட்டாச்சார்யா சாஹு கூறியதாவது: மத்திய தொல்லியல் துறையானது, நிபுணர்கள் செய்யும் அகழாய்வுகளுக்காக அதிகமான நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கிறது. நாட்டின் பல்வேறு கலாசாரத்தையும், வரலாற்றையும் வெளிக்கொண்டு வரவே, இந்த அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. நாட்டில் கீழடியில் மட்டுமல்ல, பல இடங்களிலும் அகழாய்வுகள் நடந்துள்ளன. அவற்றின் அறிக்கைகளை வல்லுநர் குழுவுக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதல் பெற்றபின் தான் பொதுவெளியில் வெளியிடப்படுகின்றன.

தடை இருக்காது

அந்த வகையில் தான், கீழடி அகழாய்வு அறிக்கையிலும் விளக்கம் கேட்கப்பட்டிருக்கும். அந்த அறிக்கை பற்றியோ, அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்கப்பட்ட விளக்கம் பற்றியோ எனக்கு தெரியாது. ஆனாலும், நாங்கள் மத்திய தொல்லியல் துறைக்காக பணியாற்றும் ஊழியர்கள். அது கேட்கும் விளக்கங்களை அளிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இது வழக்கமான நடைமுறையே. நாளிதழ்களில் செய்தி வெளியிடும் முன், ஆசிரியர் விளக்கம் கேட்பது போலான நடைமுறை தான் இதுவும். இது, கீழடிக்கான தனி நடைமுறையாக சித்தரிப்பது ஏற்புடையதல்ல. அமர்நாத் ராமகிருஷ்ணனின் விளக்கம் ஏற்புடையதாக இருந்தால், அறிக்கை வெளியாவதில் தடை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக தொல்லியல் அறிஞர்கள் கூறியதாவது: அகழாய்வு அறிக்கை, தரவுகளால் கட்டமைக்கப்படுவது. விளக்கம் கேட்கும் போதுதான், அறிக்கைக்கான தரவுகளை பொது வெளியில் தர முடியும். அதனால், அமர்நாத் ராமகிருஷ்ணன் தரவுகளை தருவதில் கவுரவம் பார்க்கக்கூடாது. தொல்லியல் ஆய்வுகளில், அரசியல் புகுந்து விடவும் கூடாது. ஆய்வாளர்கள், முன் முடிவுகள் அற்றவர்களாகவும், ஆய்வறிக்கையை ஆராயும் நிபுணர்கள் திறந்த மனதுடனும் அணுகினால், பிரச்னைகள் வராது. இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kannan
ஜூன் 01, 2025 18:51

ஒருவர் ஆதாரம் இருக்கிறது என்று அறிக்கை தருகிறார். இன்னொருவர் வந்து அங்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லி ஆராய்ச்சியை மூடுகிறார். மீண்டும் முதல் நபரே வந்து ஆயிரக்கணக்காண ஆதாரங்களை எடுக்கிறார். இரண்டாம் நபர் யார் சொல்லி இங்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை கொடுத்தார்? இதில் எவர் செய்வது அரசியல்? அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும். இது அரசியலுக்கும் பொறுந்தும், பத்திரிகைக்கும் பொறுந்தும். நியாமாக நடந்தார்களா இல்லையா என்பதை அவரவர் எச்சத்தால் காணப்படும்.


பெரிய குத்தூசி
ஜூன் 01, 2025 08:12

தமிழகத்தில் தமிழக அரசின் அகழாய்வு என்ற பெயரில் கிறிஸ்துவ மிழினரிகளின் மறைமுக பங்கு இங்கு உள்ளது என அகழாய்வு குழுவில் உள்ள மத்திய அரசு அதிகாரியும், எனது நண்பருமான அவர் தெரிவித்துள்ளார். கீழடியில் முக்கியமாக கிறிஸ்துவ சம்பந்தப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளது என கிறித்துவ மதமாற்ற அமைப்புகளின் துணையோடு கிறிஸ்துவ மத போலியாக உருவாக்கப்பட்ட பொருட்களை திராவிட அரசுகளின் துணையோடு மண்ணின் உள்ளே வைத்து அகழாய்வில் கிடைப்பது போன்ற பிம்பத்தை இப்போதுள்ள திமுக அரசு உருவாக்க முயற்சிக்கிறது என குற்றம் சாடுகிறார். அது சம்பந்தபட்ட கார்பன் சோதனைகளும் பொய்யானது என கூறுகிறார். இதன்மூலம் கிறிஸ்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுடன் கலந்திருந்தது என ஒரு பொய்யான narrative பிம்பம் செட்டப் செய்து தமிழ் மக்களின் முக்கியமாக தமிழ் இந்துக்களின் மனதில் கிறிஸ்துவத்தை பற்றிய சாப்ட் கார்னெர் ஒன்றை உருவாக்கி பள்ளிப்பாடங்களில் அதை திணித்து இந்திய வரலாறு தெரியாத 90 கிட்ஸ் மாணவர்களை மனதளவில் மதமாற்றத்தை சுலபப்டுத்தி மாணவர்கள் அளவில் இருந்து கிறிஸ்துவ மதமாற்றத்தை செயல்படுத்துவதே தமிழக திமுக அரசின் கீழடி உள்ளடி வேலைகளாகும். தமிழர்களே, மாணவர்களே, இந்து பெற்றோர்களே உஷார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை