சேலம்:''அரசு பள்ளியில், 'ஓசி'யில் சாப்பாடு போடுகிறோம், ஷூ கொடுக்கிறோம் என்கிறார். உதயநிதியிடம் ஒன்று கேட்கிறேன், 'உங்கள் அப்பன் வீட்டு பணத்தில் இருந்தா கொடுக்கிறீர்கள்?'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஏற்கனவே ஒரு பேட்டியில் உதயநிதி, 'உங்கள் அப்பன் வீட்டு பணத்தில் இருந்தா கொடுக்கிறீர்கள்' என, மத்திய அரசை விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறியதையே அவருக்கு பதிலடியாக, தற்போது அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சேலத்தில் நேற்று, பா.ஜ.., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை, 56 லட்சத்தை தாண்டியுள்ளது. அரசு பள்ளிகளில், 52 லட்சம் பேர் படிக்கின்றனர். 2006ல், 200க்கும் குறைவாக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது, 2010ஆக அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வளர்ச்சியை விட, தனியார் பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என, கம்பீரமாக சொல்கிறோம். இந்த விவகாரத்தில் ஏக மனதாக அனைத்து கட்சிகளும் ஒரு பக்கத்தில் நிற்கின்றன. பா.ஜ., தனித்து நிற்கிறது.த.வெ.க., விஜய், வி.சி., திருமாவளவன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்துகின்றனர். ஹிந்தி கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், பத்திரிகைகளில் பேசும்போது, 2 மொழி தான் படிக்க வேண்டும் என்கின்றனர். ஒரு வாரமாக அரசியல் தலைவர்கள் போடும் இரட்டை வேடத்தை தோலுரித்து, தமிழக மக்களுக்கு எடுத்துச்சொல்கிறோம். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் ஆகியோர் தரமின்றி, வரம்பின்றி பேசுகின்றனர்.தமிழக அரசு அங்கீகாரம் கொடுத்து நடத்தும் மெட்ரிக் பள்ளிகளிலேயே தமிழ் கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டினால், 'அரசு பள்ளியில், 'ஓசி'யில் சாப்பாடு போடுகிறோம், ஷூ கொடுக்கிறோம்' என்கிறார். உதயநிதியிடம் ஒன்று கேட்கிறேன், 'உங்கள் அப்பன் வீட்டு பணத்தில் இருந்தா கொடுக்கிறீர்கள்?' மக்கள் வரிப்பணத்தில் கொடுத்து விட்டு, 'ஓசி'யில் கொடுப்பதாக கருத்து கூறுகிறார். உதயநிதி வீட்டின் முன்பாக பாலிடாயில் பாபு என போஸ்டர் ஒட்டுவேன்; அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் விட மாட்டேன் என்று சொன்னதும், அண்ணாமலை தரமாக பேச வேண்டும் என்கிறார் உதயநிதி. யார் பேச்சு தரமானது என பார்க்கலாமா? அவர் பேசியதில், 'பழனிசாமி, சசிகலாவுக்கு மண்டியிட்டு ஊர்ந்து போய் காலை பிடிப்பார்; அன்புமணி ராமதாஸ் டயர் நக்கி, 29 பைசா மோடி' என்ற வாசகங்கள் எல்லாம் தரமானதா? நாங்கள் ஆதாரத்துடன் கேள்வி கேட்கிறோம். ஆனால், உதயநிதி பொய் சொல்கிறார். ஹிந்தியை திணிக்கின்றனர் என்கிறார். தரமின்றி பேசினால், இனி அவருக்கான பதிலும் அவர் பாணியில்தான் வரும். நேற்று தொடங்கியது, 'டிரைலர்' தான்.மும்மொழி கொள்கைக்கு மக்கள் இடையே வரவேற்பு உள்ளது. மார்ச், 1ல் தொடங்கி, 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் முடியும்போது, மக்கள், 3வது மொழியாக எதை விரும்புகின்றனர்; எவ்வளவு ஆதரவு என்பதும் தெரியும்.தமிழக முதல்வர், கோலம் போடுவது குறித்து பாராட்டி 'டுவிட்' போடுகிறார். பொய்யாக ஆட்கள், 'செட்' செய்து, சாதகமாக வீடியோ பதிவு செய்வதை, மற்றொரு, 'டிவி' உடைத்து காட்டியுள்ளது. மாநில அரசு கல்விக்கு, 44,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளனர். இவ்வளவு நிதியை செலவழிக்கும் தமிழக அரசு, 2,000 கோடி ரூபாய் வழங்காததால், பள்ளி கல்வித்துறையை நடத்த முடியவில்லை என்பது பச்சை பொய். உதயநிதி, 'கெட் அவுட் மோடி' என டுவிட் செய்துள்ளார். தி.மு.க.,வினர் மற்றும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதை எவ்வளவு வேண்டுமானாலும் பரப்புங்கள். 24 மணி நேரம் தருகிறேன். நாளை காலை, 6:00 மணிக்கு, ஆட்சி செய்ய தெரியாத, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்காத, தரமான வசதி செய்து தராததால், 'கெட் அவுட் ஸ்டாலின்' என டுவிட் போடுகிறேன். நாளை மறுநாள் தெரியும், பா.ஜ.,வின் பலம்.இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வரின் தரமான பேச்சு
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துணை முதல்வர் உதயநிதி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மரியாதை இல்லாமல் அரசியல் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசுகிறார். தமிழகம் கேட்கும் நிதியை மத்திய அரசிடம் இருந்து வாங்கிக் கொடுக்க துப்பில்லை. என் வீட்டு முன்பாக போஸ்டர் ஒட்டுவேன்; அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் விட மாட்டேன் என்றேல்லாம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விட்டிருக்கிறார். பதில் சவால் விடுக்கிறேன்; தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வந்து பார். தனியார் பள்ளிகள் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை; மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளியில், இலவச உணவு, சீருடை எல்லாம் வழங்கப்படுவது இல்லை. அதனால், தனியார் பள்ளியை அரசுப் பள்ளியுடன் ஒப்பிடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
தற்குறித்தனமாக செயல்படுகிறார்!
அரசியல் அரவேக்காடு அண்ணாமலை, முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து ஒருமையில் பேசுவது, அரசியல் அநாகரிகத்தின் உச்சம். திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி, கால்களில் 'ஷூ' அணிந்து வலம் வருவது, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை கண்டு, நாடே எள்ளி நகையாடுகிறது. துணை முதல்வர், அமைச்சர் ஆகியோரை, 'தற்குறி' என சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாகவும், தற்குறித்தனமாகவும் செயல்படுகிறார். அண்ணாலை, கண்ணாடி முன் நின்றால், அவருடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும்.மா.சுப்பிரமணியம், சுகாதாரத் துறை அமைச்சர்