உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 445ல் இருந்து 338 ஆக குறைந்தது முதல்வர் ஸ்டாலின் தகவல்

வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 445ல் இருந்து 338 ஆக குறைந்தது முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை:அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வகையான சமூக விலக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 1.59 கோடி ரூபாய் அரசு மானியத்துடன், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான மையம் சென்னையில் துவங்கப்பட்டது. இந்த மையம், விளிம்பில் உள்ள பழங்குடியின மக்கள் குறித்த ஆய்வுகள், ஆவணப்படங்கள் தயாரிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.இதன் காரணமாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள், 6 சதவீதம் குறைந்துள்ளன. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள், 2021ல், 445 ஆக இருந்தன; 2024ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இது, 19 சதவீதம் குறைவாகும்.கடந்த நான்கு ஆண்டு களில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, 421 பேருக்கு வேலை வாய்ப்பு, 649 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஒரு புதிய முயற்சியாக, வன்கொடுமைகள் குறித்த புகார் தெரிவித்தல், வழக்குப் பதிவு செய்ய உதவுதல், சட்ட ஆலோசனை வழங்குவதற்கு, தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மையம் துவங்கப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு, இதுவரை வந்துள்ள 5,191 மனுக்களில், 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பொதுப்பிரிவினரின் கல்வி அறிவு, 80.09 சதவீதம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு 73.26 சதவீதம் என உள்ளது. கல்வி அறிவை உயர்த்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மொத்த நிதி ஒதுக்கீட்டில், கல்வி சார்ந்த திட்டங்களுக்கு மட்டும், 71.31 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலாளர்களாக உள்ள, ஆதிதிராவிட மகளிரை, நில உரிமையாளர்களாக மாற்ற, 'நன்னிலம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 625 பேருக்கு, 30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, மகளிர் நில உடைமையாளராக மாற்றப்பட்டு உள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவும், அரசு உறுதியுடன் உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:வி.சி., தலைவர் திருமாவளவன்: கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக புதிய சட்டம், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்தார். தமிழகம் முழுதும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில், பாதிக்கப்படும் மக்கள் மீது, வழக்குப்பதிவு செய்வது தொடர்கிறது. அதிகாரிகள் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு, ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கேரளா பல்கலையில் இளங்கோவடிகள் இருக்கை அமைக்க, முதல்வர் 1 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதை, 2.50 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மனு அளித்துள்ளோம். வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரினோம். அரசு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுஉள்ளது. எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., நாகை மாலி: தமிழகத்தில் பரவலாக தீண்டாமை குற்றங்கள் நடந்து வருகின்றன. இவற்றை, ஒரு நாளில் தீர்க்க முடியாது. அரசு உறுதியாக இருந்தால் தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால், காவல்துறையினரிடம், ஜாதிய மனோநிலை இருப்பதால், அரசின் வேகத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.தீண்டாமை குற்ற வழக்குகளை, பெரும்பாலான இடங்களில், காவல் துறையினர் ஜாதிய மனப்போக்குடன் செயல்பட்டு, அந்த வழக்கை நீர்த்து போக செய்கின்றனர். பட்டியலின அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றோம். சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கூட்டத்தில், அமைச்சர்கள் கோவி.செழியன், கணேசன், மதிவேந்தன், கயல்விழி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ