தனியார் சிலீப்பர் பஸ்களை வாடகைக்கு இயக்கும் எ ஸ்.இ.டி.சி. ,
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக, தனியார் 'சிலீப்பர்' வகை பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க, அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துஉள்ளது. தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த ஆண்டு முடிவு செய்தன. அதற்காக, அரசு போக்குவரத்து துறையுடன், தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்கள் வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், முதலில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. படிப்படியாக தேவைக்கு ஏற்ப, மற்ற அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல் முறையாக, எஸ்.இ.டி.சி., எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 'சிலீப்பர்' வகை பஸ்களை, தனியாரிடம் இருந்து பெற்று இயக்க, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், சேலம், கோவை போன்ற மாவட்டங்களுக்கும் அதிகமாக பஸ்கள் தேவைப்படுகின்றன. எனவே, தேவை அடிப்படையில், அரசு ஒப்பந்தப்படி தனியார் பஸ்களை இயக்கும் திட்டத்தை, நாங்களும் செயல்படுத்த உள்ளோம். இதனால், பயணியருக்கு தடையின்றி பஸ் வசதி கிடைப்பதோடு, செலவும் குறையும்.கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தனியார் பஸ்களுக்கு, 1 கி.மீ., 51.25 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 20 'சிலீப்பர்' வகை தனியார் பஸ்களை, 'அரசு ஒப்பந்த பஸ்' என்ற பெயரில் இயக்க உள்ளோம். அரசு பஸ்சை இயக்கும்போது, 1 கி.மீ.,க்கு 65 ரூபாய் செலவாகிறது. அதுவே, தனியார் பஸ்சை எடுத்து இயக்கினால், 1 கி.மீ.,க்கு அதிகபட்சம் 55 ரூபாய்க்குள் தான் செலவாகும்; குறைந்தபட்சம் 10 ரூபாய் எங்களுக்கு மிச்சமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல், விழுப்புரம், மதுரை அரசு போக்குவரத்து கழகங்களும், தனியார் பஸ்களை இயக்க உள்ளன. வரும் ஜூன் வரை, தேவையான நாட்களில் மட்டுமே இந்த பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளன.