உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு

மதுரை: மதுரைக்கு சட்டசபை உறுதிமொழிக்குழு வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று வந்தது. கடந்த 2018 பிப்ரவரியில் தீவிபத்தில் பாதிப்படைந்த மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டது.இங்கு தீவிபத்தால் சிற்பவேலைப்பாடுகள் மிக்க கல்துாண்கள் பாதிப்படைந்தன. அவை மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கான பணிகள் நடக்கிறது. இதை பார்வையிட்ட குழுத்தலைவர் வேல்முருகன், 'கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே உள்ளது. பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லையே' என்றார். இணை கமிஷனர்கள் கிருஷ்ணன், மாரிமுத்து ஆகியோர், 'குவாரிகளில் கற்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. கற்களில் சிற்ப வேலைப்பாடுகளை செய்யும்போது உடைகிறது' என்றனர். இந்தக் கற்களை பரிந்துரைத்தது யார் எனக்கேட்ட குழுவினரிடம், 'ஐ.ஐ.டி.,யினர்தான்' என்ற அதிகாரிகள், 'குறிப்பிட்ட ஒரு குவாரியில் இருந்துதான் கற்கள் வரவேண்டியுள்ளது. அங்கு தேவையான கற்கள் இல்லை' என்றனர். அருகில் இருந்த கலெக்டர், 'அப்படியானால் வேறு மாநிலங்களில் இருந்து கற்களை கொண்டு வரமுடியுமா' என்று கேட்டார். குழுத்தலைவர் வேல்முருகன், 'ஏன் பணிகளில் தாமதம்' என்று மீண்டும் கேட்க, அதிகாரிகளோ, 'மொத்தம் 79 கல்துாண்கள் தேவை. அதில் 55 கல்துாண்கள் வரவழைக்கப்பட்டு வெளியில் வைத்து சிற்ப வேலைகள் நடக்கின்றன. இன்னும் 24 கல் துாண்கள் தேவை. விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்போம்' என்றனர். எப்படி இருந்தாலும் இத்தனை நாள் பணிகள் பாதித்தது வருத்தமாக உள்ளது என்ற வேல்முருகன், தனது கருத்தைப் பதிவு செய்யும் வகையில் உதவியாளர்களிடம், 'மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதது வருத்தமாக உள்ளது. வரும் டிசம்பருக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று பதிவு செய்யும்படி கூறினார்.அதையே கோயில் அதிகாரிகளிடமும், 'வரும் டிசம்பருக்குள் பணிகளை முடிக்க வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து சுவாமி தரிசனம் செய்த குழுவினர் சித்திரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
ஜூலை 10, 2025 10:12

கல் வாங்குவதிலும் கமிஷன் எதிர்பார்க்காகளோ


V RAMASWAMY
ஜூலை 10, 2025 08:33

லஞ்ச லாவண்யம் புகாத ஒரு இண்டு இடுக்கு இல்லாத நிலையில் எந்தவித மக்கள் வரிப்பண செலவுகளையும் சரிவர கண்காணித்தால் தான் கட்டுப்படுத்த முடியும், இல்லாவிடில் கொள்ளையோ கொள்ளை தான்.


Varadarajan Nagarajan
ஜூலை 10, 2025 06:44

மற்ற மாநிலங்களுக்கு மிக பிரமாண்ட விக்கிரகங்கள் செய்ய இங்கிருந்து தரமான பாறைகளிலிருந்து கற்களை வெட்டியெடுத்து கொண்டுசெல்லும்போது சிற்ப வேலைகளுக்கு தேவையான தரமான கற்கள் தமிழ் நாட்டில் இல்லையா? மதுரைக்கு வந்த சோதனை? அதுவும் சொக்கருக்கே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை