3 இடங்களில் வளிமண்டல சுழற்சி கனமழை தொடரும் என தகவல்
சென்னை:'வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே சமயத்தில் மூன்று இடங்களில், வளி மண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் நிலவிய, வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், அங்கு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. புயல் வலுவாக வாய்ப்பு
இது, தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவுகிறது. அடுத்து வரும் நாட்களில், இது புயலாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்கு அடுத்த படியாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒரே சமயத்தில் மூன்று நிகழ்வுகள் இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், நாமக்கல், அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேகமூட்டம்
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.