கட்டுமான திட்ட மதிப்பு பார்க்காமல் நல நிதி வசூல் உள்ளாட்சி அமைப்புகள் மீது தணிக்கை துறை புகார்
சென்னை:'கட்டுமான திட்டங்களின் செலவு மதிப்பை சரிபார்க்காமல், உள்ளாட்சி அமைப்புகள், தொழிலாளர் நல நிதி வசூலிப்பதால், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது' என, மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், கட்டுமான திட்டப் பணிகளின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்து வருகிறது. இத்தொழிலில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு முறையான பணி பாதுகாப்பு இல்லை என்பதால், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. புதிதாக பதிவுதற்போதைய நிலவரப்படி, வாரியத்தில் 19.30 லட்சம் பேர், உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 3 லட்சம் பேர், புதிதாக பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு கட்டுமான திட்டப் பணியை துவக்கும்போதும், அதன் மொத்த மதிப்பில், ஒரு சதவீதத் தொகையை, நல வாரியத்துக்கு வரைவோலையாக அளிக்க வேண்டும்.கட்டுமான திட்ட அனுமதியின்போது, உள்ளாட்சி அமைப்புகள் இதை வசூலித்து, 15 நாட்களுக்குள் வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில், ஆண்டுக்கு, 750 முதல், 800 கோடி ரூபாய் வரை வசூலாகிறது. இதில் கட்டுமான திட்டங்கள், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றன என்பதை, வாரியம் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து மத்திய கணக்கு தணிக்கை துறை, தமிழக அரசுக்கு அனுப்பிஉள்ள அறிக்கை:ஒவ்வொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்தும்போதும், அதற்கு பணி அனுமதி, உள்ளாட்சிகள் வாயிலாகவே வழங்கப்படுகின்றன.அனுமதி அளிக்கும்போது, கட்டுமான திட்டத்தின் மொத்த மதிப்பில், ஒரு சதவீதத் தொகையை, கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து, கட்டுமானத் தொழிலாளர் நல நிதியாக, உள்ளாட்சிகள் பெறுகின்றன. மொத்த மதிப்புஇதில் கட்டுமான திட்டங்களின் உண்மையான மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை, உள்ளாட்சி அமைப்புகள் சரியாக ஆய்வு செய்வதில்லை. இதுகுறித்து, உள்ளாட்சி அமைப்புகளிடம் விசாரித்ததில், பதிவு பெற்ற பொறியாளர் தெரிவிக்கும் மதிப்பு அல்லது பொதுப்பணித்துறையின் விலை பட்டியல் அடிப்படையில், கட்டுமான திட்ட மதிப்பு கணக்கிடப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால், நடைமுறையில், இதை பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் கடைபிடிப்பது இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்த தொகையை பகுப்பாய்வு செய்ததில், 18 சதவீத உள்ளாட்சிகள், பொதுப்பணித்துறை கட்டு மான விலைப்பட்டியல் மதிப்பில், பாதிக்கும் குறைவான தொகையை வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 34 சதவீத உள்ளாட்சிகளில், பொதுப்பணித்துறை விலைப்பட்டியல் மதிப்பில், நான்கில் மூன்று பங்குக்கும் குறைவான தொகை வசூலாகி உள்ளது. கட்டுமானப் பணி மதிப்பு குறைவாக கணக்கிடப்படுவதால், தொழிலாளர் நல நிதிக்கான தொகையும் வெகுவாகக் குறைகிறது. பரிந்துரைதனியார் மேற்கொள்ளும் திட்டங்கள் மட்டுமல்லாது, உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியிலும், கட்டுமானத் தொழிலாளர் நல நிதி முறையாக வசூலிக்கப்படுவதில்லை. இதனால், கட்டுமான திட்டங்கள் அதிகரித்த அளவுக்கு, கட்டுமானத் தொழிலாளர் நல நிதிக்கான வசூல் உயரவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் கட்டுமான அனுமதிகளில், சம்பந்தப்பட்ட திட்ட மதிப்பு விபரங்களை கணக்கிடுவதற்கு, வழிகாட்டி நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இதில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், கட்டுமான செலவை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும்படி, தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக, கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.