பா.ம.க., சமூகநீதி பேரவை தலைவராக பாலு தொடர்வார்; சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: பா.ம.க., சமூகநீதி பேரவை தலைவராக பாலுவே தொடர்வார் என்று சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க.,வில் ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதும், அவர்களை மீண்டும் அன்புமணி கட்சியில் சேர்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், அன்புமணிக்கு ஆதரவாக நின்ற பா.ம.க.,வின் முக்கிய நிர்வாகியான, வழக்கறிஞர் பாலுவை, பா.ம.க.,வின் வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கம் செய்தார். அவருக்கு பதிலாக வக்கீல் வி.எஸ்.கோபு, சமூகநீதி பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது பா.ம.க.,வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் பாலுவே தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனில், 3ல் 2 பங்கு பெரும்பான்மை உள்ள பேரவையின் அறங்காவலர்கள் குழு கூடித்தான் தீர்மானிக்க முடியும். வேறு எந்த வழிகளிலும் பேரவையின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் புரவலராக அன்புமணியை ஒருமனதாக தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பாலுவை பதவி நீக்கம் செய்த ராமதாஸின் உத்தரவு செல்லாது என்பதைத் தான், பா.ம.க., வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் உணர்த்துகிறது.