நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு
மதுரை:நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள சீடர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.நித்யானந்தா தியான பீடம் அறங்காவலர் சந்திரசேகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்துார், கோதைநாச்சியாபுரம் கிராமங்களில் தனி நபர் இடத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் சீடர்கள் வெளியேற வேண்டும் என ராஜபாளையம் சப் கலெக்டர் பிப்., 10ல் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்களை வெளியேற்ற ராஜபாளையம் டி.எஸ்.பி., நடவடிக்கை மேற்கொண்டார். வழக்கு நிலுவையில் உள்ளபோது யாரையும் வெளியேற்றக்கூடாது. சப் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு மார்ச் 25ல் விசாரணைக்கு வந்தபோது, சப் கலெக்டர் பிறப்பித்த உத்தரவிற்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.இந்நிலையில், நீதிபதி விக்டோரியா கவுரி முன் நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. சீடர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 18க்கு ஒத்திவைத்தார்.