சிறந்த போலீஸ் நிலையங்கள்
சென்னை: தமிழகத்தின் சிறந்த மூன்று போலீஸ் நிலையங்களுக்கு, குடியரசு தின விழாவில், முதல்வர் ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில், சிறப்பாக பணிகளை செய்தல், குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற்ற, மூன்று போலீஸ் நிலையங்களுக்கு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டு, தமிழகத்திலேயே சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல் பரிசுக்கு, மதுரை மாநகரத்தை சேர்ந்த 'சி3' எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கான, கோப்பையை, சென்னையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், இன்ஸ்பெக்டர் காசியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இரண்டாவது பரிசுக்கான கோப்பையை, திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார்; மூன்றாம் பரிசுக்கான கோப்பையை, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர், முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.