12 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது
சென்னை:சிறந்த நெசவாளர், சிறந்த வடிவமைப்பாளர், சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளை, 12 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கு, பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான பரிசுகளுக்கு, காஞ்சிபுரம் சந்திரசேகரன், புகழேந்தி, ஆரணி குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பருத்தி ரகத்தில், முதல் மூன்று பரிசுகளுக்கு பரமக்குடி பிரேமா, அலமேலு, கோவை மகாலட்சுமி தேர்வு பெற்றுள்ளனர்.சிறந்த வடிவமைப்பாளர் விருதுகளுக்கு, காஞ்சிபுரம் குமரவேல், பார்த்திபன் மற்றும் கமலவேணி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு, கரூர் கல்லுாரி மாணவி தர்ஷணா, மதுரை சங்கர், கோவை மாணவி ஹரிணி ஆகியோர் தேர்வாகினர்.இவர்களுக்கு நேற்று தலைமைச் செயலகத்தில், 22.65 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். அமைச்சர் காந்தி, தலைமைச் செயலர் முருகானந்தம், கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இயக்குனர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.