உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரதியார் நினைவு நாள்: நூறாண்டானாலும் நிமிர்ந்து நிற்கும் புகழ் படைத்த மகாகவி!

பாரதியார் நினைவு நாள்: நூறாண்டானாலும் நிமிர்ந்து நிற்கும் புகழ் படைத்த மகாகவி!

'தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கியவர்; எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, கட்டுரையாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இவரது 103வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11).

மீசை பிறந்த கதை:

பாரதிக்கு, 14 வயதிலும்; செல்லம்மாளுக்கு 7 வயதிலும், 1897, ஜூன், 15ல் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு அடுத்த ஆண்டு, பாரதியின் தந்தை சின்னசாமி இறந்தார். பெரும் கஷ்டத்துக்கு ஆளான பாரதி, காசியில் இருந்த தன் அத்தை கும்பம்மாள் வீட்டில் குடியேறினார். அங்குள்ள காசி இந்துக் கல்லுாரியில் கல்வி கற்றார். மெட்ரிகுலேஷன் கல்வியில் சிறந்தார். தொடர்ந்து, அலகாபாத் சர்வகலா சாலையில், புதுமுக வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்றார். 1902 வரை அங்கிருந்த பாரதிக்கு மீசை வளர்த்து, கச்சம், வால்விட்ட தலைப்பாகை அணியும் பழக்கம் அப்போது தான் ஏற்பட்டது.

சிறைவாசம்:

பாரதியார், 1912ல் தான், தன் புகழ்பெற்ற கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட நுால்களை எழுதினார். 1918 நவ.,20ல், புதுச்சேரி எல்லையில் இருந்து வெளியேறி, பிரிட்டிஷ் எல்லையில் காலடி வைத்த போது, கைது செய்யப்பட்டு, 34 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தபின் விடுவிக்கப்பட்டார்.பின், மனைவியின் ஊரான கடையத்தில், இரண்டாண்டுகள் வறுமையில் வாடினார். எட்டயபுரம் மன்னருக்கு சீட்டுக்கவி எழுதி உதவி கேட்ட போதும், கிடைக்காததால் வறுமையில் வாடினார்.

பிடிவாதம்:

தான் நினைத்ததை அடையும் பிடிவாதம் கொண்டவர் பாரதி. தினமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள யானைக்கு பழம் கொடுப்பது வழக்கம். ஒருநாள் யானை கட்டுப்பாடற்ற நிலையில் இருந்தது. பழம் கொடுக்க வேண்டாம் என, அதிகாரிகள் சொன்னதைக் கேட்காமல் பழம் கொடுத்த பாரதியை உதைத்து தள்ளியது யானை. அதுவே, அவர் இறப்புக்கு காரணமானது. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த பாரதி, எமனை தன் காலருகே அழைத்து மிதிப்பதாக எழுதினார். தன், 39வது வயதில் மறையும் வரை, அதே தைரியத்துடன் வாழ்ந்தார்.

நிறைவேறா ஆசை:

சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை, சுயசரிதை உள்ளிட்டவை, பாரதி எழுதி முற்றுப்பெறாத நுால்கள். தன் இளைய மகள் சகுந்தலாவுக்காக எழுதியது தான், ஓடி விளையாடு பாப்பா எனும், குழந்தைகளுக்கான பாடல். பாரதியின் பாடல்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்ய, ஆர்மீனியன், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.

கடைசி உரை:

பாரதி கடைசியாக சொற்பொழிவாற்றிய ஆங்கில உரையின் தலைப்பு, 'இம்மார்ட்டல் லைப்' எனும், மரணமில்லா பெருவாழ்வு. அதன்பின், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

காந்தியடிகளுடன் சந்திப்பு:

கடந்த, 1919, மார்ச் 19ல், சென்னை திரும்பினார். அப்போது, அரசியல் மேதையான காந்தியை, ராஜாஜியின் வீட்டில் சந்தித்தார். அதுதான், அவர்களின் முதலும், கடைசியுமான சந்திப்பாக அமைந்தது.

தந்தையர் நாடு:

நாட்டை மண்ணாகவும், வேறு பொருளாகவும் பார்த்தவர்களுக்கு மத்தியில், நாட்டை கடவுளாக பார்த்த முதல் கவிஞன் பாரதி. நாட்டை தாய் நாடாக பாடியவர்களுக்கு மத்தியில், முதலில் நாட்டை தந்தை என்றும், மக்களை அதன் புதல்வர்கள் என்றும், அதைக் காப்பது கடமை என்றும் பாடிய முதல் கவிஞன்.

கடவுளுக்கே கட்டளை:

தனக்கான கோரிக்கைகளை பாடலாக பட்டியலிட்டு, இவற்றை நீ, எனக்கு கொடுக்க கடமைப்பட்டவன் என, கடவுள் கணபதிக்கு கட்டளையிட்ட முதல் தமிழ்க்கவிஞன்.

பன்மொழி வித்தகர்:

சமஸ்கிருதம் அறிந்தவர்கள் வேதம் அறிந்தவர்களாகவும், தமிழ் கற்றவர்கள் பண்டிதர்களாகவும் இருந்த நாட்களில், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என, பல மொழி கற்று, தமிழைப் போற்றி, தமிழ் கலாசாரத்தை பரப்பியவர் பாரதி.பிரும்மசூத்திரம், பகவத் கீதை, உபநிஷத்துக்களை சமஸ்கிருதத்தின் ஆதாரங்கள் என்ற போது, கம்பன், இளங்கோ, வள்ளுவனை தமிழின் ஆதாரங்கள் என்றவர் பாரதி.

ஆசிரியர் பணி:

கடந்த, 1904, நவம்பரில், சென்னையில் வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில், துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். சக்கரவர்த்தினி மாத இதழிலும் பொறுப்பாசிரியராக இருந்தார். தொடர்ந்து, சென்னையில் இருந்து துவங்கிய, இந்தியா, பாலபாரதம் உள்ளிட்ட பத்திரிகைகளை பொறுப்பேற்று நடத்தினார்.

காக்கை காதலன்:

கண்ணனுக்கு மயில் பீலியை இணைத்து காவியங்களும், ஓவியங்களும் தீட்டப்பட்ட போது, வறுமையில் இருந்த பாரதி, காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே எனப் பாடியவர்.

நகைச்சுவை:

பாரதியார் சிறந்த புதுமைக் கவிஞர் எனத் தெரிந்த பலருக்கு, அவர் சிறந்த கதாசிரியர், கட்டுரையாளர், மேடைப் பேச்சாளர், பத்திரிகையாளர் என்பது தெரியாது. எதையும் கட்டளையாக பேசத் தெரிந்த பாரதிக்கு, நகைச்சுவை உணர்வு மிகுந்திருந்தது என்பதற்கு, காக்காக்கள் பார்லிமென்ட், சும்மா, கிளி, குதிரைக்கொம்பு, காற்று, மழை, கடல், மாலை நேரம், கடற்கரையாண்டி போன்ற வேடிக்கை கதைகள் தான் உதாரணங்கள்.

பல்கலை வித்தகர்:

கற்பனை நிலையிலிருந்து மாறி, அறிவியல், வரலாறு அறிந்த கவிஞன். ஆன்மிகவாதியாக இருந்த போதும், பெண்ணியம், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளை விடாப்பிடியாக பின்பற்றியவர்.

தந்தையின் ஆசை:

பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் தமிழில் புலமை பெற்றவர். நவீன பொறியியல், கணக்கு பாடங்களில் தேர்ச்சி பெற்றவர். ஆங்கிலப் புலமையும் உண்டு. தன் மகனை, அத்துறைகளில் செலுத்த எண்ணினார். ஆனால் பாரதி, எழுத்து துறையை தேர்ந்தெடுத்தார்.

அவலம்:

பாரதி, திருவல்லிக்கேணியில் இறந்தபோதும், அவரை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும், மிகச்சிலர் மட்டுமே பங்கேற்றனர். அன்றைய தமிழ்ப் பத்திரிகைகள், அவரின் மரண செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்பது தான், அப்போதைய நிலை.

இறப்பு:

1921 செப்டம்பர் 1ம் தேதி பாரதியாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அது மேலும் கடுமையாக மாறியது. வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடந்தார். மோசமான நிலையில் இருந்த பாரதியாரை உடன் இருந்து கவனித்துக் கொண்டவர்கள் பரலி சு நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மச்சாரி லட்சுமண அய்யர் ஆகியோர். செப்டம்பர் 11ம் தேதி இரவு இவர்களுடன் பேசிய பாரதியார் ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லா கான் பற்றி ஒரு கட்டுரை எழுதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதாக நீலகண்ட பிரம்மச்சாரி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவு கடந்து 1:30 மணிக்கு பாரதியார் உயிர் பிரிந்தது. ஈமக் கிரியைகளுக்கு தேவையான நிதி உதவியை வழக்கம்போல துரைசாமி அய்யரே தந்தார் என்றும், சுமார் 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலத்தில் வந்தனர்; பாரதியின் உறவினர் ஹரிஹர சர்மா இறுதி சடங்குகளை செய்தார்; இடுகாட்டில் சுரேந்திரநாத் ஆர்யா சிறு சொற்பொழிவு நடத்தினார் என்றும் பரலி சு நெல்லையப்பர் குறிப்பிடுகிறார்.

நினைவு தினம்:

சென்னை கார்ப்பரேஷனை பொருத்தவரை பாரதியார் இறந்த நேரம் நள்ளிரவு 1:30 மணி என்பதால், அவர் செப்டம்பர் 12ம் தேதி இறந்தார் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஹிந்து மத மரபின்படி சூரிய உதயத்தில் தான் புதிய நாள் தொடங்குகிறது. ஆகவே அவர் செப்டம்பர் 11ம் தேதி மறைந்ததாகவே கருதி அதே நாளில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
செப் 11, 2024 20:52

பாரதியாரை ராஜாஜி அவமான படுத்தியுள்ளார்.


angbu ganesh
செப் 11, 2024 17:53

பாரதி, திருவல்லிக்கேணியில் இறந்தபோதும், அவரை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும், மிகச்சிலர் மட்டுமே பங்கேற்றனர். அன்றைய தமிழ்ப் பத்திரிகைகள், அவரின் மரண செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்பது தான், அப்போதைய நிலை. இப்போதய நெலம மட்டும் அப்படித்தானே இருக்கு


angbu ganesh
செப் 11, 2024 16:56

கண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா இந்த தமிழ் நாட்ட கண்டவங்க கிட்ட எல்லாம் கொடுத்தோம் கெடுத்தோம்


M S RAGHUNATHAN
செப் 11, 2024 16:32

இப்போது பாரதியார் உயிருடன் இருந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார். அரசு பாரதியார் கவிதைகளை தடை செய்து இருப்பார்கள்.


Sudha Sudharsan
செப் 11, 2024 15:48

நினைக்கும்போதே நெஞ்சுருகி கண்ணீர் peruguthu


radha
செப் 11, 2024 15:39

தமிழ்நாட்டின் சாவர்க்கர்.


சமூக நல விரும்பி
செப் 11, 2024 14:33

இன்றைக்கு பாரதியார் உயிருடன் இருந்தால் நம் திராவிட மாடல் அரசு அவரை யோவ் பாரதி நீ யார் இந்த பாட்டு கவிதை எல்லாம் எழுத. ஆன்மீகம் மற்றும் மதம் மொழி பற்றி எல்லாம் எழுத கூடாது என்று கூறுவர். அந்த அளவு திமுக இந்து மக்கள் மீது துவேஷம் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை அவர் நம்முடன் இன்று இல்லை. இருந்தால் மிகவும் வேதனை பட்டு இருப்பார்.பாரதி தமிழுக்கும் இந்த உலக மக்களுக்கும் கொடுத்த நூல்கள் கவிதைகள் பாட்டுக்கள் என்றும் அழியாதவை. மோடிஜி அவர்களுக்கு இந்து மக்கள் என்றும் கடமை பட்டு இருக்கிறோம். வாழ்க பாரதி. வந்தே மாதரம்


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2024 13:59

எனது சிறுவயதில் அவரை ஒரு சிறந்த கவிஞராக மட்டுமே நினைத்திருந்தேன் ..... சில ஆண்டுகளுக்கு முன்பு பகவத் கீதைக்கான அவரது உரையைப் படித்தேன் ..... பழமொழிகள் கற்றிருந்த அந்தக்கால பிராம்மணர், சம்ஸ்கிருதமும் கற்றவர் என்பதால் சம்ஸ்கிருதத்தில் நிபுணராக அவர் இருந்தது பெரிய விஷயமில்லை .... கடினமான ஆன்மிக அடிப்படை விஷயங்களை அந்த உரையில் குறிப்பிட்டிருந்ததைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன் .... அவர் பாரதத்தின் பொக்கிஷம் .....


Balasubramanian
செப் 11, 2024 13:39

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாரத மண்ணிலே தோன்றுதல் வேண்டுவனே இந்து புண்ணிய பூமியில் தோன்றுதல் வேண்டுவனே என்று பாடியவர் பாரதியார்! இன்றைய தமிழகத்தை அவர் மறு ஜென்மம் எடுத்து காண நேர்ந்தால் - நமக்கு நினைக்கவே நெஞ்சே பொறுக்குதில்லையே!


M Ramachandran
செப் 11, 2024 13:37

தமிழகத்தில் தலை குனிந்து நிற்கும் மகா கவி. காசியில் மகா கவி பாரதியார் வாழ்ந்த இல்லமிருக்கிறது. அங்கு இருக்கும் பாரதியார் சகோதரி பேத்தியாய் கேட்டால் தமிழக அரசிடமிருந்து ஒரு உதவியும் கிடைய்யப்பதில்லைய என்று கூறுகிறார். அங்கு பெயர் பலகைய்ய மட்டும் நம் முதல்வர் பெயர் தாங்கி நீர்க்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை