அமித்ஷாவிற்கு எதிராக தி.மு.க., தீர்மானம்; வழக்கு தொடர்வதாக பா.ஜ., அறிவிப்பு
சென்னை: ''அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாழ்வாக பேசியதாக, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும்'' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.அவரது பேட்டி:
அமித்ஷா பேசியதை திசை திருப்பி, அம்பேத்கரை அவர் அவமதித்து விட்டதாக, தவறான கருத்தை, காங்.,- தி.மு.க., கட்சியினர் நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். இதுவரை அம்பேத்கரின் பெருமைகளை, காங்கிரஸ் கட்சி சீர் துாக்கிப் பார்த்ததில்லை. அவரது நுாற்றாண்டு விழாவை கூட, காங்கிரஸ் ஆட்சியில் நடத்தவில்லை. பா.ஜ., ஆட்சியில் தான், அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டது.அம்பேத்கரின் எந்த அடையாளத்தையும், காங்., கட்சி உருவாக்கவில்லை. அவர் பிறந்த, வாழ்ந்த, தொழில் செய்த இடம், புத்த மதத்திற்கு மாறிய இடம், வெளிநாட்டில் படித்த இடம் ஆகியவற்றை பா.ஜ., அரசு தான், புண்ணிய தலங்களாக மாற்றி உள்ளது. அமித்ஷா பேச்சை திரித்து கூறி, அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.அம்பேத்கர் குறித்து அமித்ஷா தாழ்வாக பேசியதாக, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும்.'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து, பல தலைவர்கள் விளக்கிய பிறகும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு எதிராக, தீர்மானம் போடுவது வேடிக்கையான செயல்.தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் இணைவதற்கு, எட்டு லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பை, தமிழக அரசு தட்டி பறித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.