உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடார் ஓட்டுக்களை குறிவைக்கிறது பா.ஜ., தமிழிசை மத்திய அமைச்சராகும் வாய்ப்பு?

நாடார் ஓட்டுக்களை குறிவைக்கிறது பா.ஜ., தமிழிசை மத்திய அமைச்சராகும் வாய்ப்பு?

தமிழக பா.ஜ.,வில் உள்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் மாநிலத் தலைவர் வரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களுக்கான கவர்னராகவும் இருந்த தமிழிசையை டில்லிக்கு வருமாறு, கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது; அதன்படி, அவர் கட்சியின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிலரை சந்தித்துள்ளார். நாடார் இன பிரதிநிதி ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க, பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளதாகவும், அதையடுத்தே, அவர் டில்லி சென்று, கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்ததாகவும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தைப் பொறுத்தவரை, பிரதான ஜாதியைச் சேர்ந்தோருக்கெல்லாம் முக்கியப் பொறுப்புகள் அளிப்பதன் வாயிலாக, அவ்வினத்தைச் சேர்ந்தோர் மத்தியில் கட்சியை வேகமாக வளர்த்தெடுப்பதோடு, அவ்வின மக்கள் ஓட்டுக்களை எளிதாக பெற முடியும் என, பா.ஜ., தரப்பில் முழுமையாக நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில், தமிழகத்தின் பிரதான ஜாதியான கவுண்டர் இனத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியும், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பொறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. பட்டியல் இன ஓட்டுக்களை குறிவைத்தே, முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகன், நீலகிரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்பும், அவரை மத்திய அமைச்சராக்கி உள்ளனர். அண்ணாமலை கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், அவருக்கு இரண்டாவது முறையும் தலைவர் பதவி கொடுப்பது என, மேலிடத்தில் முடிவெடுத்துள்ளனர். அதனால், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்து நாடார் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் பெண் என்பதாலும், ஏற்கனவே கவர்னராக இருந்தவர் என்பதாலும், தமிழிசைக்கு வாய்ப்பு வழங்க, கட்சி மேலிடத்தில் ஆலோசிப்பதாக தெரிகிறது. ஒருவேளை, தமிழிசை இல்லாதபட்சத்தில், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கிக்கான இந்திய மண்டல இயக்குனர் ஜெனரலாக இருக்கும் ஜெகதீசப்பாண்டியன், பீஹாரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும் லண்டனில் இந்தியத் துாதராகவும் இருந்த ராஜன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் சிவன், தமிழகத்தில் இருந்து பிரதமருக்கு அரசியல் புள்ளிவிபரங்களை அளித்து வரும் நபர் உள்ளிட்டோரில் ஒருவரை, மத்திய அமைச்சராக்கவும் ஆலோசனை நடக்கிறது. இவர்கள் தவிர, பிரதமர் அலுவலகத்தோடு தொடர்பில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நாடார் இனப் பிரதிநிதிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட சிலருடைய பெயர்களும் மேலிடத்தின் ஆலோசனையில் இருக்கின்றன. கடந்த லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல தொகுதிகளில், பா.ஜ., குறிப்பிடத்தக்க ஓட்டுக்களை பெற்றிருக்கிறது. அதற்கு, ஹிந்து நாடார் ஓட்டுக்களே காரணம். இந்த விபரங்களை மத்திய உளவுத் துறையினர், பா.ஜ., மேலிடத்துக்கு அளித்துள்ளனர். அதனால், பா.ஜ.,வுக்கு விசுவாசமாக ஓட்டளித்து வரும் ஹிந்து நாடார் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் அளிப்பதன் வாயிலாக, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !