தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பா.ஜ., மேலிடம் முடிவு செய்யும்
''தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து, பா.ஜ., மேலிடம் தான் முடிவு செய்யும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சென்னை கமலாலயத்தில், அவர் அளித்த பேட்டி:நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் தொடர்பாக, சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துஉள்ளது. காங்கிரசின் இந்த ஊழலை கண்டித்து, தமிழக பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். தேதியும், நேரமும் பின்னர் சொல்கிறோம். பெண்களை இழிவாக பேசும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். பா.ஜ., உண்மையான சமூக நீதிக்கட்சி. இந்த கட்சியில் கிளை செயலரும் மாநில தலைவராக முடியும்; மாநில தலைவரும் தேசிய செயலராக முடியும். தி.மு.க.,வை போல பா.ஜ., குடும்ப கட்சி கிடையாது. நேற்று வரை கட்சியை கட்டுப்பாட்டுடன் வளர்த்த அண்ணாமலை, இன்று என்னை தலைவராக உட்கார வைத்துள்ளார். தி.மு.க.,வில் குடும்ப ஆதிக்கம் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என, வாரிசுகள் வர இருக்கின்றனர். மூத்த தலைவர்கள் கூட, ஸ்டாலின் பேரனுக்கு தலைவணங்க தயாராக உள்ளனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி அமித் ஷாவும், பழனிசாமியும் பேசி முடிவெடுத்து உள்ளனர். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என்பது பற்றி, டில்லி பா.ஜ., மேலிடம் தான் முடிவு செய்யும். கூட்டணி ஆட்சி விவகாரத்தில், அ.தி.மு.க., நிலைப்பாடு மாறுகிறதா என்பது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், மாணவர்களிடம் பரவியுள்ள வன்முறை செயல்கள் என, மக்களுக்கு எதிராக உள்ள தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகளுடன், அமித் ஷா கூட்டணியை உருவாக்கி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.