உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம்

மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம்

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலையை மீண்டும் துவக்க, 'போர்டு' நிறுவனம் முடிவு செய்து, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு மோட்டார் கம்பெனிக்கு, 350 ஏக்கரில் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு, 2 லட்சம் கார்கள், 3.40 லட்சம் கார் இன்ஜின்கள் உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், நம் நாட்டில் விற்கப்பட்டதுடன், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2021ல் போர்டு ஆலை மூடப்பட்டது; அங்கு பணிபுரிந்த பலர் வேலை இழந்தனர். அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, 2024 ஆகஸ்ட் இறுதியில் அந்நாட்டிற்கு சென்றது. அக்குழு, போர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்தது. தமிழகத்தில் மீண்டும் செயல்பாடுகளை துவக்க வேண்டும் என, முதல்வர் கேட்டுக் கொண்டார். அப்போது, போர்டு நிறுவன அதிகாரிகள் உறுதியளித்தபடி, 3,250 கோடி ரூபாய் முதலீட்டில், 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தி திட்டம் மீண்டும் துவங்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் வாகன இன்ஜின் உற்பத்தியை துவக்க, போர்டு நிறுவனம் முன்வந்து உள்ளது.இது, முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.போர்டு நிறுவனம் முதல் கட்டமாக ஆண்டுக்கு, 2.35 லட்சம் இன்ஜின்களை உற்பத்தி செய்ய உள்ளது. அதை தாண்டி, புதிய தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள போர்டு சர்வதேச திறன் மையத்தில் பணிபுரியும், 12,500 பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், போர்டு அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தொழில் துவங்குவதற்கு சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு வந்து முதலீடுகளை செய்யும் நிறுவனங்கள், பல மடங்கு லாபம் ஈட்டி வருகின்றன. அதன் வாயிலாக, தமிழக மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நம் வலிமைக்கு சான்று

முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். மிக நீண்ட நம்பிக்கை கொண்ட உறவை புதுப்பிக்கும் வகையில், இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. அடுத்த தலைமுறை இன்ஜின்களை உற்பத்தி செய்ய, இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தை தேர்வு செய்துள்ள போர்டு நிறுவனத்தின் முடிவு, தமிழகத்தின் தொழில் துறை வலிமைக்கும், உலக உற்பத்தி சங்கிலியில் நம் தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றொரு சான்றாக உள்ளது. -ஸ்டாலின், முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி