சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓராண்டு பயிற்சியை நிறுத்திவைக்கும் அரசாணை திரும்ப பெறப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை பூந்தமல்லியில் உள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில், புத்தகம், 'பைண்டிங்' செய்யும் நுால் கட்டுனர், உதவியாளருக்கு, ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், 25 மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெற்று வந்தனர். தற்போது, டிஜிட்டல் மயமாக்கல் போன்ற காரணங்களால், நுால் கட்டுனர் பணிக்கான வாய்ப்பு குறைந்துள்ளதால், அப்பயிற்சியை நிறுத்த அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் சுப்பிரமணியனிடமும் அரசாணையை திரும்ப பெற மனு அளித்தனர். அதை ஏற்று, அரசாணையை திரும்ப பெறுவதாக, அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தற்போது, நுால்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுவதால், நுால் கட்டுனர், உதவியாளர் போன்ற பயிற்சிகள் தேவையில்லாமல் போய்விட்டன. அதனால், பயிற்சியை நிறுத்த முடிவுசெய்து அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, அது திரும்ப பெறப்பட்டுள்ளதால், பூந்தமல்லி தொழிற்பயிற்சி நிலையத்தில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும்.திருநெல்வேலி, பாளையங்கோட்டை, 'நீட்' பயிற்சி மையத்தில், மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பயிற்சி மையத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.