புத்தகம் இல்லா கல்வி திட்டம் அரசு பள்ளிகளில் தொடக்கம்
சென்னை: ‘புத்தகம் இல்லா கல்வி’ எனும் மகிழ்வுடன் முன்னேறு திட்டத்தை, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, ‘மாணவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறமையை, உலகத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில், மாணவர்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித்திறமைகள், கற்றல் ஆர்வம் மலர, புத்தகப்பை இல்லா கல்வியாக, ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம், 6,279 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 1.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், மகிழ்வுடன் முன்னேறு தினம், வரும் டிச.,1, வரும் ஜன., 12, பிப்.,2ம் தேதிகளில் கடைபிடிக்க, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ‘இந்த நாளுக்கான செயல்பாடுகளை, மாணவர்களே திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, தங்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.