| ADDED : அக் 23, 2025 12:39 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சிறுவன் ஓட்டிய கார் மோதி தாத்தா, பேத்தி உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாயார் சிறையில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் 56. முடி திருத்தும் கடை நடத்தி வந்தார். இவர் தீபாவளியன்று மதியம் 3:00 மணிக்கு பேத்தி வர்ஷா 14, உடன் மொபட்டில் கன்னியாகுமரி நோக்கிச் சென்றார். பழவூர் அருகே அதிவேகமாக வந்த கார் அவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தாத்தா, பேத்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பழவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்தக் காரை ஓட்டியவர் திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன் என தெரியவந்தது. சிறுவன் கைது செய்யப்பட்டு, இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 18 வயது நிறைவடையாத, டிரைவிங் லைசென்ஸ் பெற தகுதியற்ற சிறுவனை கார் ஓட்ட அனுமதித்ததாக அவரது தாயார் திவ்யா 41, கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிகிறார்.