உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரெய்லி புத்தகங்கள் தாமதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் அவதி

பிரெய்லி புத்தகங்கள் தாமதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் அவதி

சென்னை:தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 'பிரெய்லி' புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பார்வை குறைபாடுள்ள மாணவர்கள், படிப்பதற்கு சிரமப்படுகின்றனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்காக, 10 சிறப்பு பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன.இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், அவை உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. பள்ளிகள் திறந்து, சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்கு பிறகே கிடைக்கின்றன. அத்துடன், இம்மாணவர்கள் பயன்படுத்தும், 'பிரெய்லி' பாடப்புத்தகங்களும், ஆண்டுதோறும் தாமதமாகவே கிடைக்கின்றன. நடப்பாண்டு திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் செயல்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், ஒன்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பிரெய்லி பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பிரெய்லி பாடப்புத்தகங்களை பொறுத்தவரை, அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், எழுத்துக்கள் சிதையும். இதனால், முந்தைய ஆண்டு மாணவர்களின் புத்தகங்களை பயன்படுத்த முடியாது. அரசு தரப்பிலும் உரிய நேரத்தில் புத்தகம் வழங்கப்படுவதில்லை. பள்ளிகள் திறந்து, 10 நாட்களுக்கு பிறகே, திருச்சியில் உள்ள சிறப்பு பள்ளிகளில், ஒன்று முதல் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டு தவணைகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அதேபோல், புதிய மாணவர்களுக்கும், எந்த வகுப்பிற்கும் புத்தகம் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.அவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி