சென்னை, நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மன நிறைவான நாள் எனக்கு: ஸ்டாலின் பேச்சு
இன்று மனசுக்கு ரொம்ப நிறைவான நாள். 20 லட்சம் மாணவர்கள் இன்று காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடு தான், சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லி இருக்கிறது. கல்வி அறிவை வழங்குவதாக மட்டும் பள்ளிகள் இருக்க கூடாது. மாணவர்களின் வயிற்று பசியையும் போக்க வேண்டும்.
ரூ.600 கோடியில் இந்த திட்டம்
காலை உணவு திட்டத்தை தொடங்கியதற்கு காரணம் என்னவென்றால், ஆட்சி பொறுப்பெற்ற சில நாட்களில் சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவர்களின் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டேன். நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். இதனை மனதில் வைத்து தான் காலை உணவு திட்டத்தை அறிவித்தேன். காலை உணவு திட்டத்தை நானே நேரில் கண்காணித்து வருகிறேன். ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இது செலவு என்று சொல்லமாட்டேன். சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். இதன் வாயிலாக, ஆரம்ப கல்வி படிக்கும் 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு உறுதி செய்யப்பட்டு உள்ளது. வறுமை, பெற்றோர் பணிச்சூழல் காரணமாக, கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், காலை உணவு சாப்பிட முடியாத நிலை உள்ளது. பசியோடு பள்ளி செல்லும் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, 2022 செப்டம்பரில் மதுரை மாநகராட்சி துவக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, அரசு துவக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டம், 2023 ஆகஸ்டில் திருவாரூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் பயன் பெறும் வகையில், இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2024 ஜூலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தால் பள்ளிக்கு வரும் குழந்தை களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, கற்றல் திறன், ஞாபக திறன் அதிகரிப்பதாகவும், முந்தைய பாடங்களை நினைவுகூர்வது அதிகரிப்பதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசும் துவக்கியுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் என, மார்ச் மாதம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பயன் பெறும் வகையில், இன்று இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார். இதன் வாயிலாக, நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 3.05 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். ஏற்கனவே, 17.5 லட்சம் பள்ளி குழந்தைகள், இத்திட்டம் வாயிலாக பயன் பெற்று வருகின்றனர். வாரம் இரு முறை பொங்கல் ஏன்?
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி: அரசின் காலை உணவு திட்டத்திற்கான உணவுகள், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், பொது சமையலறை வாயிலாகவும், கிராமப்பகுதிகள் மற்றும் பேரூராட்சிகளில், மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாகவும் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, மாநிலம் முழுதும், 33,322 சமையல் கூடங்கள் இயங்கி வருகின்றன. ஊரகப்பகுதிகளில் உணவு சமைக்கும் பணியில், அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் அம்மாக்களும் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உணவு போதுமானதாக இருக்கிறது; சுவை நன்றாக இருக்கிறது என, குழந்தைகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. கோரிக்கைக்கு ஏற்ப இத்திட்டத்தில் சிறிது சிறி தாக மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி உப்புமா வேண்டாம் என, 60 சதவீத குழந்தைகள் தெரிவித்தனர்; அதற்கு பதிலாக பொங்கல், சாம்பார் வேண்டும் என்று கேட்டனர். வாரத்திற்கு இரண்டு முறை பொங்கல், சாம்பார் வழங்கப்படுகிறது. கிராமப்புற குழந்தைகள் வீட்டிலேயே கேழ்வரகு கூழ் போன்றவற்றை சாப்பிடுகின்றனர்.அவர்களுக்கு சிறுதானிய உணவு பிடிப்பதில்லை. மிளகு முட்டை, தக்காளி மசாலா
கிராமப்புறங்களில் 90 சதவீத குழந்தைகள், பள்ளியில் காலை உணவு சாப்பிடுகின்றனர். நகரப் பகுதிகளில் 85 சதவீதம் பேர் சாப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக பள்ளிகளில் காலை உணவை, 88 சதவீத குழந்தைகள் சாப்பிடுகின்றனர். இதனால், மதிய உணவு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. கலவை சாதம், மிளகு முட்டை, தக்காளி மசாலா முட்டை வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கு, பட்ஜெட்டில் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதால், நிதியில் எந்த பிரச்னையும் இல்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில், முழுமையாக காலை உணவு திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.