உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புது ரேஷன் கார்டுக்கு புரோக்கர்கள் வசூல் பிரவுசிங் சென்டர்களில் ரூ.1,000 கட்டணம்

புது ரேஷன் கார்டுக்கு புரோக்கர்கள் வசூல் பிரவுசிங் சென்டர்களில் ரூ.1,000 கட்டணம்

சென்னை:புதிய ரேஷன் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் நடத்தும் வசூல் ஜோராக நடக்கிறது. இதன் பின்னணியில், சில பணியாளர்களும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு, 1.15 கோடி மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குகிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஏற்கனவே விடுபட்ட மற்றும் புதிய மகளிருக்கு விண்ணப்பம் வழங்கி, உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, ரேஷன் கார்டு அவசியம் என்பதால், பலரும் புதிய கார்டு கேட்டு, உணவு வழங்கல் துறையின் இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். உரிய ஆவணம் இல்லாத விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த நபர்களை தொடர்பு கொண்டு, ரேஷன் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி, சிலர் பணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்ய தெரியாததால், பலர் ரேஷன் கடை ஊழியர்களின் உதவியை நாடுகின்றனர். அவர்கள் கூறுவது போல், ஆதார் எண், தற்போது வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் ரசீது, திருமண சான்று, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பம் செய்யப்படுகிறது. விண்ணப்பித்துத் தர, 'பிரவுசிங் சென்டர்'களில், 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் கேட்டால், 'ஆவண நகல் சரியாக தெரியவில்லை' என்று, அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விபரத்தை தெரிந்துகொண்டு, '10,000 ரூபாய் வழங்கினால், புதிய கார்டு வாங்கித் தரப்படும்' என, சிலர் கூறுகின்றனர். இதற்கு, ரேஷன் ஊழியர்கள் அல்லது உணவு வழங்கல் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலரும் உடந்தையாக உள்ளனர். பணம் கொடுத்தும், ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. பணம் வாங்கியவர்களிடம் கேட்டால், 'ரேஷன் கார்டு தர இரு மாதங்களாகும்' என்று கூறுகின்றனர். ஒரு மாதத்திற்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகளை, அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. எனவே, ரேஷன் கார்டுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்; எத்தனை நாட்களில் கிடைக்கும் ஆகிய விபரங்களை, அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
ஜன 30, 2025 20:54

ஒழுங்காக ரேஷனில் வேஷ்டி சேலை கொடுக்க வக்கில்லாத நிர்வாகம்.மந்திரி தண்டம்


ramesh
ஜன 29, 2025 11:04

இப்படி வசூல் செய்யும் அரசு ஊழியர்களை நிரந்தரமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பவேண்டும்


R.RAMACHANDRAN
ஜன 29, 2025 07:22

லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு வழங்குவதால் தான் குடும்ப எண்ணிக்கையை விட எரிவாயு இணைப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை