தீபாவளிக்குள் ஊதிய ஒப்பந்தம் பஸ் ஊழியர்கள் வலியுறுத்தல்
சென்னை:அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது: முதல் கட்ட முத்தரப்பு பேச்சு முடிந்து, அடுத்தகட்ட பேச்சு அடுத்த 10 நாளில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாதது, ஏமாற்றம் தருகிறது. ஆயுத பூஜை, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. மேலும் அரசு தாமதத்தை ஏற்படுத்தி, பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடாது. போராட்டங்கள், வேலைநிறுத்தம் என்ற கட்டாயத்துக்கு தள்ளாமல், தீபாவளிக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.அரசு போக்குவரத்துக் கழக, 'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பேரவை பொதுச்செயலர் காமராஜ் கூறுகையில், ''தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வருவதால், நெரிசலை சமாளிக்க வழக்கமான பஸ்களோடு, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். ''அந்த நேரத்தில், போராடும் நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது. ஊதிய ஒப்பந்தம், தீபாவளி போனஸ் குறித்து ஒரே நேரத்தில் பேச்சு நடத்தி முடிவு காண வேண்டும்,'' என்றார்.