ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய ஸ்டார்ட் - அப்களுக்கு முகாம்
சென்னை:அரசு நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பதற்கு, 'ஜெம் போர்ட்டலில்' பதிவு செய்ய, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக சென்னையில் வரும், 11ம் தேதி தமிழக அரசின் ஸ்டார்ட் -- அப் டி.என்., நிறுவனம் முகாம் நடத்துகிறது. நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், ரயில்வே, கப்பல் கட்டும் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை, 'ஜெம் போர்ட்டல்' வாயிலாக, 'டெண்டர்' கோரி வாங்குகின்றன. இந்த போர்ட்டலில் பதிவு செய்ய, 'ஸ்டார்ட் --- அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தெரிவதில்லை. இதனால், அந்நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை, அரசு நிறுவனங்களுக்கு விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள், ஜெம் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு உதவ, சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்டார்ட் - அப் டி.என்., அலுவலகத்தில் வரும், 11ம் தேதி காலை, 10 மணிக்கு, 'ஜெம் வொர்க் ஷாப்' எனப்படும் முகாம் நடத்தப்படுகிறது. இதில், ஜெம் போர்ட்டலில் பதிவு செய்யும் வழிமுறை, பொருட்கள் மற்றும் சேவைகள் பட்டியலை பதிவேற்றம் செய்து, அரசு நிறுவனங்களுக்கு விற்பது உள்ளிட்டவை தொடர்பாக, விரிவாக தெரிவிக்கப்பட உள்ளது. ஜெம் போர்ட்டல் அதிகாரிகள், தொழில்முனைவோரின் சந்தேகங்களை விளக்க உள்ளனர். இந்நிகழ்வில், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்க விரும்புவோர், 'form.startuptn.in/GMA' முகவரியில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை, 'startuptn.in' மின்னஞ்சல் முகவரி மற்றும், 97899 18210 மொபைல் போன் எண்ணில் தெரிந்து கொள்ளலாம். ஜெம் போர்ட்டலில் புத்தொழில்கள் பதிவுக்கு உதவ நவ.,11ல் முகாம் சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில் நடக்கிறது விபரங்களுக்கு: இ - மெயில் 'startuptn.in', மொபைல்: 97899 18210