உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயை பிரியும் குட்டி யானைகளை தனியாக வளர்த்து காட்டில் விட முடியுமா? வனத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

தாயை பிரியும் குட்டி யானைகளை தனியாக வளர்த்து காட்டில் விட முடியுமா? வனத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை:வன விலங்குகள் சிகிச்சை மையங்களில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு, அதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, வனத்துறை விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தாய் யானையை குட்டிகள் பிரியும் நிகழ்வுகள், சமீப காலமாக நடந்துள்ளன. இந்த குட்டிகளை வேறு யானை கூட்டத்துடன் சேர்த்து வைக்க, வனத்துறை முயற்சிக்கிறது.

உத்தரவு

அந்த குட்டி யானைகளை, மற்றொரு கூட்டம் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, ஐந்து சதவீதம் தான் என, மறைந்த யானைகள் நிபுணர் அஜய் தேசாய் தெரிவித்துள்ளார்.எனவே, தாயை பிரியும் குட்டி யானைகளை, வேறு கூட்டத்துடன் சேர்ப்பதற்கு பதில், நான்கு அல்லது ஐந்து குட்டி யானைகளை சேர்த்து ஒன்றாக வளர்த்து, பின், வனத்தில் விட உத்தரவிட வேண்டும். இதேபோல, வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். கடந்த, 2021 முதல் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல், 20 யானைகள் உயிரிழந்துள்ளன. நோய்வாய்ப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை வழங்கவும், மறுவாழ்வு வழங்கவும், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற கால்நடை டாக்டர்கள் அடங்கிய நவீன மருத்துவ வசதியை ஏற்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தள்ளிவைப்பு

இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மையங்கள், ஒரு சில இடங்களில் துவக்கப்பட்டுள்ளன. அங்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கால்நடை மருத்துவர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? அந்த மருத்துவர்களுக்கு வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?இந்த மையங்களில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் எத்தனை என்ற விபரங்கள் அடங்கிய அறிக்கையை, வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், தாயை பிரியும் குட்டி யானைகளை ஒன்றாக வளர்த்து, பின் வனத்தில் விடுவது குறித்தும், காட்டுநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும், வனத்துறை பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., 4க்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ