ஈரோட்டில் ஈ.வெ.ரா.,வை பேசி ஓட்டு கேட்க முடியுமா? தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி
விக்கிரவாண்டி:''ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வெ.ரா.,வை பேசி ஓட்டு வாங்க போகிறீர்களா அல்லது காந்தி நோட்டு கொடுத்து ஓட்டு சேகரிப்பீர்களா?'' என, சீமான் கேள்வி எழுப்பினார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் பூரிகுடிசையில், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:கள்ளுக்கு தடை அவசியமற்றது. வேறு எந்த மாநிலத்திலும் கள் இறக்க தடை இல்லை. நம் மாநிலத்தில் மட்டும் கள் இறக்க தடை உள்ளது. டாஸ்மாக்கில் விற்பனை செய்வது என்ன கோவில் தீர்த்தமா... கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.ஈரோடு இடைத்தேர்தலில் களத்தில் இருவர் தான் உள்ளனர். ஆனால், களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். பல அமைச்சர்களை அனுப்பியும், கூட்டணி கட்சிகள் இருந்தும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஏன்?ஈ.வெ.ரா.,வை புகழ்ந்து பேசுவதும், இகழ்வோரை எதிர்ப்பதுமாக இருக்கும் தி.மு.க., ஈரோட்டில் ஈ.வெ.ரா., பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்கலாமே. ஈ.வெ.ரா., பெண்கள் குறித்தும், 'தாலி அடிமை சின்னம்; அதை அறுத்து எறியவேண்டும்; கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம்' எனவும் பேசியுள்ளார். தமிழ் மொழியை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும், முட்டாள் பாஷை என பேசியவர் ஈ.வெ.ரா., அவர் உங்களுக்கு பெரிய ஆள் என்றால், அவர் பேசியதையெல்லாம் சொல்லி, தி.மு.க., ஈரோட்டில் ஓட்டு கேட்க வேண்டும். தி.மு.க., ஈ.வெ.ரா.,வை பேசி ஓட்டு கேட்கப் போகிறதா? அல்லது காந்தி நோட்டு கொடுத்து ஓட்டு சேகரிக்கப் போகிறதா?இவ்வாறு சீமான் கூறினார்.
மூலிகைச்சாறு என சொல்லுங்கள்!
தமிழனின் தேசிய பானம் கள். அந்த பெயர் தான் பிரச்னை என்றால் பனம்பால், மூலிகைச்சாறு என்று பெயர் வைக்கலாம். மற்ற மாநில முதல்வர்களுக்கு மது ஆலைகள் இல்லை; ஆனால், தமிழகத்தை ஆண்ட அனைத்து முதல்வர்களுக்கும் மதுபான ஆலை உள்ளது. தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்து வைத்தால், சட்டம் - ஒழுங்கு எப்படி சரியா இருக்கும்?கள்ளுக்கடை திறந்து விட்டால் டாஸ்மாக் படுத்துவிடும். அரசு ஒருபோதும் கள்ளுக்கு தடையை நீக்க மாட்டார்கள். மூன்று, நான்கு சீட்டுக்காக மண்டியிடுபவன் நான் அல்ல. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்