உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புற்றுநோய் சிகிச்சை மையம்; மேலும் ரூ.10 கோடி தேவை

புற்றுநோய் சிகிச்சை மையம்; மேலும் ரூ.10 கோடி தேவை

திருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு, பொதுமக்களின் பங்களிப்பாக மேலும் 10 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.திருப்பூரில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோயால் பாதிக்கபட்டவர்கள் கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தால், திருப்பூர் ரோட்டரி மற்றும் பொதுநல அறக்கட்டளையினரின் பங்களிப்புடன், 90 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், பொதுமக்களின் பங்களிப்பாக, 30 கோடி ரூபாய், அரசு சார்பில், 60 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

உரிய கட்டமைப்புகள்

தமிழக மருத்துவக் கவுன்சில் நியமன உறுப்பினர் டாக்டர் முருகநாதன் கூறுகையில்,''பொதுமக்களின் பங்களிப்பாக, இதுவரை, 20 கோடி ரூபாய் வரை திரட்டப்பட்டுள்ளது. இன்னும், 10 கோடி ரூபாய் திரட்டப்பட வேண்டியிருக்கிறது. இந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவில், நோயாளிகளுக்கு விரிவான மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.இந்த சிகிச்சை மையத்துக்கு 'மெடிக்கல் லினியர் ஆக்ஸிலிரேட்டர்', உள் கதிர்வீச்ச சிகிச்சை, கீமோதெரபி யூனிட் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது,'' என்றார்.மக்களுக்கு பயன்திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், ''திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஓராண்டாக, 1,500 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. பிரத்யேக சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வந்தால், மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

புத்துணர்வு மையம்: 11ல் பாலக்கால்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 'புற்றுநோயாளிகள் புத்துணர்வு மைய கட்டட'த்திற்கு, பாலக்கால் நடும் விழா வரும், 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். மாவட்ட கலெக்டர், எம்.எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மருத்துவக்கல்லுாரி டீன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ