குற்ற தொடர்வு இயக்குனர் நியமனம் எதிர்த்து வழக்கு
சென்னை:மாநில குற்ற தொடர்வு துறை இயக்குனர் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கும்பகோணத்தில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றும் இதான் இஷான் என்பவர் தாக்கல் செய்த மனு:மாநில குற்ற தொடர்வு துறை இயக்குனராக, கிருஷ்ணராஜா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதை எதிர்த்து, நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். மனு நிலுவையில் இருக்கும் போது, இந்த நியமனம் நடந்துள்ளது. தேர்வுக்கான விதிகள் எதுவும் இல்லை. தேர்வு முறையும் தெரியவில்லை. நியமன விதிகள், பணி நிபந்தனைகள் வகுக்கப்படவில்லை.எனவே, மாநில குற்ற தொடர்வு துறை இயக்குனராக கிருஷ்ணராஜா செயல்பட தடை விதிக்க வேண்டும். எந்த அடிப்படையில் பதவி வகிக்கிறார் என்பதற்கு, அவரிடம் விளக்கம் பெற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.