உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை; ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 'கோவை ஈஷா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்' என, கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், 'ஈஷா யோகா மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை, அருகில் உள்ள எங்கள் விவசாய நிலங்களில் விடுவதால், கால்நடைகள், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீரும் மாசடைகிறது. கழிவு நீரை வெளியேற்ற, முறையான வசதிகள் செய்யும் வரை, விழாக்கள் நடத்த, பக்தர்கள் கூட அனுமதிக்க கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் மனுதாரர் தாக்கல் செய்த, மற்றொரு வழக்கில், 'போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒலி அளவு, அனுமதிக்கப்பட்ட அளவில் தான் பயன்படுத்தப்படுகிறது' என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கை அடிப்படையில், கடந்த பிப்ரவரியில் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது எனக் கூறி, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMASAMY S
செப் 10, 2025 12:30

வழக்கை அபராதத்தோடு தள்ளுபடி செய்ய வேண்டும்.


visu
செப் 10, 2025 10:01

ஈஸா மேல அவதூறு சொல்லவே ஒரு குரூப் இருக்கு கோவை ராமகிருஷ்ணன் பியூஸ் மனுஷ் என்று எத்தனை முறை வழக்கு நிக்கலன்னாலும் சும்மா வழக்கு போடுவானுங்க